சீவூர்-மூங்கப்பட்டு இடையே பொதுமக்களே அமைத்த மரப்பாலம்


சீவூர்-மூங்கப்பட்டு இடையே பொதுமக்களே அமைத்த மரப்பாலம்
x
தினத்தந்தி 25 Nov 2021 6:26 PM GMT (Updated: 25 Nov 2021 6:26 PM GMT)

சீவூர்- மூங்கப்பட்டு இடையே வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால், பொதுமக்களே மரப்பாலம் அமைத்தனர்.

குடியாத்தம்

சீவூர்- மூங்கப்பட்டு இடையே வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால், பொதுமக்களே மரப்பாலம் அமைத்தனர்.

பாலம் அடித்து செல்லப்பட்டது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சீவூர் மேட்டுக்களம், மூங்கப்பட்டு, மீனூர், ராமர் பாளையம், கொல்லிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் குடியாத்தத்திற்கு வந்துசெல்ல குடியாத்தம் சீவூர் வழியாக செல்லும் கானாற்று பாலத்தை கடந்து செல்லவேண்டும். மறுபகுதியில் பெரும்பாடி கவுண்டன்யமகாநதி ஆற்றையும், அக்ராவரம் கவுண்டன்யமகாநதி ஆற்றையும் கடந்து செல்ல வேண்டும்.

தற்போது கவுண்டன்மகாநதி ஆற்றில் வெள்ளம் செல்வதால் இரண்டு பக்கமும் அவர்கள் செல்லமுடியாமல் சீவூர் வழியாகத்தான் வெளியூருக்கு வந்து செல்ல முடியும். கடந்த 18-ந் தேதி இரவு கொல்லப்பல்லி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சீவூர்-மூங்கப்பட்டு சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து அதன் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.

மரப்பாலம் அமைப்பு

 இதனால் மூங்கப்பட்டு செல்லும் வழி முற்றிலும் தடைபட்டு அப்பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கிராம மக்கள் குடியாத்தம் உள்ளிட்ட வெளி பகுதிகளுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் இரண்டு சக்கர வாகனம் மூலமாக மட்டுமே மூங்கப்பட்டு புது காலனி, தட்டப்பாறை காலனி வழியாக வரமுடியும்.

இதனையடுத்து அடித்துச்செல்லப்பட்ட தரைப் பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக மரப்பாலம் அமைக்க பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி சீவூர் காளியம்மன் அறக்கட்டளை, சீவூர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து 10 அடி அகலம், 40 அடி நீளத்திற்கு 9 பனைமரங்களை அடுக்கி அதன்மீது மரப் பலகைகளை வைத்து மரப்பாலம் ஒன்றை அமைத்தனர்.

கடந்த ஒரு வாரமாக மறு பக்கத்திற்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்த இப்பகுதி மக்கள் தற்காலிக பாலம் அமைத்ததை தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து இனிப்புகள் வழங்கினர்.

Next Story