சத்துவாச்சாரி நீர்வீழ்ச்சியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை
சத்துவாச்சாரி மலையில் உள்ள ‘கப் அண்ட் சாசர்’ நீர்வீழ்ச்சியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேலூர்
சத்துவாச்சாரி மலையில் உள்ள ‘கப் அண்ட் சாசர்’ நீர்வீழ்ச்சியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குழாய் உடைப்பு
வேலூர் மாநகராட்சி பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பாலாற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆம்பூர், மாதனூர் இடையே காவிரி கூட்டுக் குடிநீர் குழாயை வெள்ளம் அடித்துச் சென்றது. இதனால் வேலூர் மாநகராட்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் அதிகமாக செல்வதால் எந்த இடத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது இன்னும் கண்டுபிடிக்கவில்லை. வெள்ளம் முழுமையாக குறைந்த பிறகுதான் உடைப்பு ஏற்பட்ட இடம், குழாய்கள் அடித்துச் செல்லப்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெறும். அதுவரை காவிரி கூட்டுக் குடிநீர் சப்ளை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் குடிநீர் ஆதாரம் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சி பகுதியில் பொன்னை ஆற்று தண்ணீர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து வருகின்றனர். லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
நீர்வீழ்ச்சியில் இருந்து
இந்தநிலையில் சத்துவாச்சாரி வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலை பின்புறம் உள்ள மலையில் கப் அண்ட் சாசர் என்ற நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதில் இருந்து ஏற்கனவே தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அதன் அருகே உள்ள குடிநீர் தொட்டியை நிரப்பி பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.
ஆனால் காவிரி கூட்டுக் குடிநீர் வந்ததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீண்டும் இந்ததிட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி கப் அண்ட் சாசர் நீர்வீழ்ச்சி அருகே உள்ள குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு நேற்று காலையில் கப் அண்ட் சாசர் நீர்வீழ்ச்சியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரும் பணிகள் நடந்தது.
இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் தண்ணீர் தொட்டியில் இருந்து 23 மற்றும் 24-வது வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட உள்ளது. குடிநீர் தொட்டியில் குளோரின் கொண்டு தண்ணீர் சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story