முதல்கட்டமாக 100 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை. அமைச்சர் துரைமுருகன் தகவல்
பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது முதல் கட்டமாக 100 தடுப்பணைகள் கட்ட இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
ராணிப்பேட்டை
பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது முதல் கட்டமாக 100 தடுப்பணைகள் கட்ட இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
அமைச்சர்கள் ஆய்வு
ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையிலிருந்து, தண்ணீர் அதிக அளவு கடந்த வாரம் திறந்துவிடப்பட்டதன் காரணமாகவும், தொடர் மழை பொன்னை ஆற்றில் வெள்ளம் சென்றது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதி, மேல்பாடி அருகே உள்ள பொன்னை ஆறு தரைப்பாலம் உடைந்து சேதமடைந்தது. இதனை நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு வெள்ள நீர் குறித்தும், சேதங்கள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து பொன்னை அணைக்கட்டு பகுதியில் பார்வையிட்டு, வெள்ள நீர் அதிக அளவு சென்றது குறித்து கேட்டறிந்தனர். பொன்னை அணைக்கட்டில் சுமார் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றது. இதனால் பொன்னை அணைக்கட்டு சாலையோரம் வெள்ள நீர் சென்று அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்று அதிகப்படியான வெள்ளநீர் இதுவரையில் சென்றதில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தார்கள்.
பின்னர் பொன்னை கிராமம் மற்றும் உடைப்பு ஏற்பட்டுள்ள பொன்னை தரைப்பாலம் பகுதியையும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-
100 தடுப்பணைகள்
பொன்னை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளநீர் கடந்த வாரம் சென்றுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். ஆற்றில் நீர் குறைந்த பின்பு அதற்கான சீர் செய்யும் பணிகள் தொடங்கப்படும். பல்வேறு கிராமங்களுக்கு பொன்னையாறு மற்றும் பாலாற்றில் இருந்து குடிநீர் நீரேற்றும் நிலையங்கள் அமைக்கபட்டுள்ளது. இவைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது.
வெள்ளம் குறைந்தவுடன் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். சட்டப்பேரவையில் அறிவித்தபடி தமிழ்நாடு முழுவதும் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து முதல்கட்டமாக குறுகிய காலத்தில் 100 தடுப்பணைகளை கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பாலாற்றில் 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி, காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் சேஷா வெங்கட், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அக்ராவரம் முருகன், காட்பாடி ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், தணிகாசலம், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story