தெப்பக்குளத்தை பராமரிக்காத அதிகாரி சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது?- ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி


தெப்பக்குளத்தை பராமரிக்காத அதிகாரி சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது?- ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
x
தினத்தந்தி 25 Nov 2021 7:18 PM GMT (Updated: 25 Nov 2021 7:18 PM GMT)

மதுரை கூடலழகர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை முறையாக பராமரிக்காத அதிகாரி சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மதுரை
மதுரை கூடலழகர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை முறையாக பராமரிக்காத அதிகாரி சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கோவில் தெப்பக்குளம்
மதுரை சின்னஅனுப்பானடியை சேர்ந்த உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் டவுன்ஹால் ரோட்டில் உள்ளது. அதன் கலைத்தோற்றத்தை மறைக்கும் வகையில் நான்கு புறமும் வணிக கட்டுமானங்கள் உள்ளன. தெப்பக்குளத்தில் குப்பைகள் குவிக்கப்படுகிறது. கழிவுநீர் கலக்கிறது.
ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்து, உத்தரவிட்டதன்பேரில் இந்த தெப்பக்குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து பராமரிக்கவில்லை.
தெப்பக்குளத்தின் ஒரு பகுதியில் இருந்த சில கடைகள் மட்டும் 2019-ம் ஆண்டில் அகற்றப்பட்டன. எனவே கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தின் கலைநயத்தை மறைக்கும் கட்டுமானங்களை அகற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். குப்பைகளை கொட்டுவது, கழிவுநீர் கலப்பதை தடுத்து தெப்பக்குளத்தை பழைய நிலைக்கு கொண்டுவந்து பராமரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஏன் பிடித்தம் செய்யக்கூடாது?
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, அங்கிருந்த 195 கடைகளில் 99 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. கடைகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக சில கடைக்காரர்கள் அறநிலையத்துறையிடம் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு நிலுவையில் உள்ளது என தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், “தெப்பக்குளத்தை முறையாக பராமரிக்காத அதிகாரியின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது? அந்த அதிகாரியை பணியிட மாற்றம் செய்யலாமே?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் “மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை பார்க்கும்போது தெப்பக்குளத்தை முறையாக பராமரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. தெப்பக்குளத்தின் தற்போதைய புகைப்படங்களை அறநிலையத்துறை மற்றும் மனுதாரர் தரப்பில் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். தெப்பக்குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினர். 
பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story