தூத்துக்குடி, நெல்லையில் அதி கனமழை


தூத்துக்குடி, நெல்லையில் அதி கனமழை
x

தூத்துக்குடி, நெல்லையில் அதி கனமழை

தூத்துக்குடி:
தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்பிறகு அவ்வப்போது காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி பலத்த மழை பெய்து வருகிறது.
மேலடுக்கு சுழற்சி
இந்த நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. 
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. 
பலத்த மழை
இந்த நிலையில் நேற்று காலையிலும் சாரல் மழை பெய்தது. காலை 9 மணிக்கு பிறகு இந்த சாரல் மழை மாவட்டம் முழுவதும் வலுத்து அதி கனமழையாக பெய்ய தொடங்கியது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் ஆறாக பாய்ந்து ஓடியது. தூத்துக்குடியில் பகல் 12 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து கொட்டியதால் மாநகரம் முழுவதும் மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையம் ஏற்கனவே சேறும் சகதியுமாக காணப்பட்டது. தற்போது பஸ் நிலையம் முழுவதும் மழைநீரால் நிரம்பி பயணிகள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம், தாளமுத்துநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தூத்துக்குடியில் ராஜீவ்நகர், பால்பாண்டி நகர், டூவிபுரம், தாளமுத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வர சிரமப்பட்டனர்.  அவ்வப்போது   மின் தடையும் ஏற்பட்டது. 
ரெயில் நிலையம்
தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையத்தில் தண்டவாளமே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் புகுந்தது. அங்கு சுமார் 1½ அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி கிடந்தது. இதனால் போலீசார் ஆவணங்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே நேற்று காலையில் பெரும்பாலான இடங்களில் சாரல் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. மாணவ-மாணவிகள் வழக்கம் போல் பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர். அதன்பிறகு மழையின் வேகம் அதிகரித்தது. இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 11 மணி முதல் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மதியத்துக்கு பிறகு கல்லூரிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை விடப்பட்ட நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். பெற்றோரும், குழந்தைகளை அழைத்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். அதே நேரத்தில் சில மாணவர்கள் தேங்கி கிடந்த மழைநீரில் உற்சாகமாக விளையாடினர். பல மாணவர்கள் மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு சென்றனர்.
25 பேர் மீட்பு
தூத்துக்குடி அருகே வாலசமுத்திரம் கிராமத்தில் 2 ஓடைகள் உள்ளன. இந்த 2 ஓடைகளிலும் நேற்று பெய்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்த ஓடைகளுக்கு நடுவில் இருந்த குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. 
அந்த குடியிருப்பில் 9 குடும்பங்களை சேர்ந்த 25 பேர் இருந்தனர். அவர்கள், வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறை உதவியுடன் கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
திருச்செந்தூர் கோவில்
இதற்கிடையே திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் 11.45 வரை இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. பின்னர் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. 
மேலும் கோவில் கிழக்கு பகுதியில் உள்ள கிரிபிரகாரத்தில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலில் தேங்கிய மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் சுவாமி மூலவர் இருக்கும் மகா மண்டபத்திற்குள் மழை நீர் செல்லவில்லை.
காத்து நின்று          சாமி தரிசனம்
மேலும் கோவில் நாழிக்கிணறு கார் நிறுத்தும் இடத்தில் கார்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் நகர் பகுதியில் உள்ள டி.பி. ரோடு, அந்த பகுதியில் உள்ள பள்ளி வளாகங்கள், காமராஜர் சாலை, ரதவீதிகள், சபாபதிபுரம் தெரு, பள்ளத்தெரு, ஜீவாநகர், அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள சாலை உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம், தினசரி மார்க்கெட் பகுதிகளில் மழை நீர் தேங்கியது. திருச்செந்தூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பணியாளர்கள், நகர் பகுதியில் ஆங்காங்கே தேங்கி உள்ள மழை நீரை மின் மோட்டார்கள் மூலமும், பொக்லைன் எந்திரம் மூலமும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து ராஜ்கண்ணாநகர், குறிஞ்சிநகர், பிரசாத்நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் போதுமான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் சாலைகள் மழைநீரில் மூழ்கி குளம் போல் காட்சியளித்தது. 
நெல்லை மாவட்டம்
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 9 மணி அளவில் லேசான மழை பெய்தது. பகல் 12 மணி அளவில் கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 2 மணி நேரம் தொடர்ந்து பெய்தது. அதன் பின்னர் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. 
இதனால் நெல்லை மாநகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. பாளையங்கோட்டை மத்திய சிறை எதிரே மெயின் ரோட்டில் தண்ணீர் தேங்கியது. வடக்கு ஐகிரவுண்டு ரோட்டில் சாலையை தண்ணீர் மூழ்கடித்தது. அருகில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு செல்லும் சாலையும் தண்ணீரில் மூழ்கியது. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இருந்து புனிதவதியார் தெருவுக்கு செல்லும் ரோடும் வெள்ளத்தில் மூழ்கியது. 
வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்யா நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள 18-வது குறுக்கு தெருவில் சில வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் பாளையங்கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருப்பதால் தண்ணீர் வேகமாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதாள சாக்கடை கழிவுநீர், கழிவறை வழியாக வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. நெல்லை மாநகரில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதுதவிர பல்வேறு தாழ்வான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
100 ஆண்டு பழமையான மரம் சாய்ந்தது
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் அருங்காட்சியக வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமையான வாகை மரம் வேரோடு சாய்ந்தது. இந்த மரம் சுற்றுச்சுவரை உடைத்ததுடன், அருகில் கல்லூரி மைதானத்தில் உள்ள சைக்கிள் நிறுத்தம் இடத்தின் மீதும் விழுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. மேலும் மரத்தை சுற்றி நிறுவப்பட்டிருந்த அரிய வகை சிலைகளும் சாய்ந்து சேதம் அடைந்தன.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை)  கனமழை, மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர்கள் செந்தில்ராஜ் (தூத்துக்குடி), விஷ்ணு (நெல்லை) ஆகியோர் பிறப்பித்து உள்ளார்.
மழை அளவு
தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
திருச்செந்தூர்- 217, காயல்பட்டினம்-246, குலசேகரன்பட்டினம்-135, விளாத்திகுளம்-35, காடல்குடி-39, வைப்பார்- 75, சூரங்குடி- 48, கோவில்பட்டி- 45, கழுகுமலை- 22, கயத்தாறு- 36, கடம்பூர்- 59, ஓட்டப்பிடாரம்- 99, மணியாச்சி- 79, வேடநத்தம்- 66, கீழஅரசடி- 40, எட்டயபுரம்- 19.3, சாத்தான்குளம்- 105, ஸ்ரீவைகுண்டம்- 138, தூத்துக்குடி- 96, அம்பை -43, சேரன்மாதேவி -53, மணிமுத்தாறு -32, நாங்குநேரி -37, பாளையங்கோட்டை -90, பாபநாசம் -34, ராதாபுரம் -40, நெல்லை -64.

Next Story