சாலையில் சுற்றித் திரிந்த 50 மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு


சாலையில் சுற்றித் திரிந்த 50 மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 26 Nov 2021 1:01 AM IST (Updated: 26 Nov 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகரில் சாலைகளில் சுற்றித் திரிந்த 50 மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர்.

நெல்லை:
நெல்லை மாநகரில் சாலைகளில் சுற்றித் திரிந்த 50 மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர்.

போக்குவரத்துக்கு இடையூறு

நெல்லை மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் மாடுகளை தொழுவங்களில் கட்டிவைத்து பராமரிக்காமல் அவிழ்த்து விடுகின்றனர். இதனால் தற்போது சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
தற்போது பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மோசமான சாலைகளில் செல்ல மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், சாலையில் திரியும் மாடுகளாலும் பல தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர்.

50 மாடுகள்

இதையொட்டி அனைத்து மாடுகளையும் பிடித்து கோசாலையில் ஒப்படைக்க மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாநகர பகுதிகளில் மாடுகள் பிடிக்கும் பணி நடைபெற்றது.
மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் உதவி ஆணையாளர் லெனின், சுகாதார அலுவலர் சாகுல் அமீது மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன் தலைமையில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றி திரிந்த 50 மாடுகள் பிடிக்கப்பட்டன.
பின்னர் அவை வாகனங்களில் ஏற்றிச் சென்று அருகன்குளம் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணியில் மாநகராட்சி ஊழியர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

Next Story