தஞ்சையில் வியாபாரிகள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்


தஞ்சையில் வியாபாரிகள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2021 1:18 AM IST (Updated: 26 Nov 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

கடைகள் அப்புறப்படுத்துவதை கண்டித்து தஞ்சையில் வியாபாரிகள் 3-வது நாளாக குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:
கடைகள் அப்புறப்படுத்துவதை கண்டித்து தஞ்சையில் வியாபாரிகள் 3-வது நாளாக குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
54 கடைகள்
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலையில் இருந்து பனகல் கட்டிடம் செல்லக்கூடிய சாலையோரத்தில் செல்போன்கடைகள், துணிக்கடைகள், டீக்கடைகள், செருப்பு கடைகள், உணவகம் என 54 கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த கடைகள் மழைநீர் வடிகால் வாய்க்கால் மீது கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த கடைகளை அப்புறப்படுத்திவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அந்த பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் புதிதாக கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. இதனால் அந்த கடைகளை இடிக்க முடிவு செய்து கடைகளை காலி செய்யும்படி வியாபாரிகளை, மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால் மாற்று இடம் தரும் வரை கடைகளை காலி செய்ய மாட்டோம் என வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்தும் மனு அளித்தனர். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி இந்த கடைகளுக்கு வழங்கப்பட்டு இருந்த மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
வியாபாரிகள் போராட்டம்
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களது வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தியும், கடைகளை அப்புறப்படுத்துவதை கண்டித்தும், அப்புறப்படுத்தினால் மாற்று இடம் வழங்கக்கோரியும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாபாரிகள் கடைகளின் முன்பு நாற்காலிகளை போட்டு தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் இந்த பகுதியில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளின் குடும்பத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
வியாபாரிகளின் போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் ஏராளமனா போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Next Story