மழையால் 9 வீடுகள் இடிந்து விழுந்தன


மழையால் 9 வீடுகள் இடிந்து விழுந்தன
x
தினத்தந்தி 25 Nov 2021 8:12 PM GMT (Updated: 25 Nov 2021 8:12 PM GMT)

ஆலத்தூர் தாலுகாவில் 9 வீடுகள் இடிந்து விழுந்தன.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் நேற்று பெய்த பலத்த மழையால் வடக்கு ஆதனூரை சேர்ந்த பிச்சையம்மாள், ஜெமீன் பேரையூரை சேர்ந்த உமா, சரவணன், கூத்தூரை சேர்ந்த நித்யா, தெற்கு ஆதனூரை சேர்ந்த மஞ்சுளா ஆகியோரின் ஓட்டு வீடுகளின் சுவர்கள் ஒரு பகுதியும், வடக்கு சில்லக்குடியை சேர்ந்த காந்திமதி, திம்மூரை சேர்ந்த வீரமணி, தெற்கு ஆதனூரை சேர்ந்த வேம்பு, ராஜாமணி ஆகியோருடைய கூரை வீடுகளின் சுவர்கள் ஒரு பகுதியும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. மேற்கண்ட வீடுகள் இடிந்து விழுந்த சம்பவங்களில் உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லை.
பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் அரசின் இழப்பீடு பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் உள்ள வீடுகளை சுற்றியும் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் வீடுகளின் வாசல் வரை மழைநீர் புகுந்துள்ளது. சில வீடுகளின் உள்ளேயே மழைநீர் புகுந்தது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மூன்று ரோடு முதல் நான்கு ரோடு வரை பிரிவு சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். பெரம்பலூர் இந்திரா நகரில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால், அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Next Story