வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் 60 பேர் தவிப்பு; 2 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் மீட்டனர்
பாளையங்கோட்டை அருகே வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவித்த 60 பேரை தீயணைப்பு படையினர் ரப்பர் படகு மூலம் மீட்டு வந்தனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவித்த 60 பேரை தீயணைப்பு படையினர் ரப்பர் படகு மூலம் மீட்டு வந்தனர்.
வெள்ளம் சூழ்ந்தது
நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக பலத்த மழை கொட்டியது. இதையொட்டி பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் நொச்சிகுளம் நிரம்பி உபரி நீர் ஊருக்குள் புகுந்தது.
இதனால் அந்தப் பகுதியில் உள்ள 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அதிகாரி சத்திய குமார் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் கமாண்டோ வீரர்கள் கிருஷ்ணாபுரம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
60 பேர் மீட்பு
அவர்கள் ரப்பர் படகு மூலம் வீடுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த பொது மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு வந்தனர். இதில் பிறந்து 7 நாட்கள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை உட்பட 60 பேரை மீட்டு பாதுகாப்பாக மேட்டு பகுதிக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள வருவாய்த் துறையினரால் தயார் செய்யப்பட்ட பாதுகாப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு இரவு உணவு உள்ளிட்ட வசதிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் செய்து கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டனர்.
Related Tags :
Next Story