சேலம் அம்மாபேட்டையில் ஆட்டோ டிரைவரின் வீடு இடிந்து விழுந்தது 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


சேலம் அம்மாபேட்டையில் ஆட்டோ டிரைவரின் வீடு இடிந்து விழுந்தது 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 26 Nov 2021 1:56 AM IST (Updated: 26 Nov 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அம்மாபேட்டையில் நேற்று அதிகாலை ஆட்டோ டிரைவரின் வீடு இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சேலம், 
ஆட்டோ டிரைவர்
சேலம் அம்மாபேட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35), ஆட்டோ டிரைவர். இவர் ரஞ்சித்குமார் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 
கண்ணன் அந்த வீட்டில் தனது மனைவி சத்யா, தாய் கமலா, மகன் சஞ்சித், மகள் பிருந்தா ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்ணனின் வீட்டுக்கு அவருடைய தங்கை மீனாட்சி மற்றும் அவரது குழந்தைகள் சங்கர், கனி ஆகியோர் வந்தனர். 
அவர்கள் அனைவரும் இரவில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 3.15 மணி அளவில் வீட்டின் சுவர் திடீரென மண்ணுக்குள் இறங்கி, மேல் இருந்த ஓடுகள் பெயர்ந்து கீழே விழத்தொடங்கின.
வீடு இடிந்து விழுந்தது
இதை கவனித்த கண்ணன் உடனே சுதாரித்துக் கொண்டு வீட்டின் மேற்கூரை விட்டங்களை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். மேலும் தூங்கி கொண்டிருந்த மனைவி, தாய், தங்கை, குழந்தைகள் ஆகியோரை எழுப்பி வேகமாக வெளியேற்றினார். இதையடுத்து அவரும் அதை விட்டுவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டார். அதன்பிறகு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. இதனால் கண்ணன் உள்பட 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர்கள் சத்தியமூர்த்தி, சரவணகுமரன், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கண்ணனிடம் வீட்டுக்குள் வேறு யாராவது சிக்கி உள்ளார்களா? என போலீசார் கேட்டறிந்தனர்.
தொடர் மழையினால்...
அதைத்தொடர்ந்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று இடிபாடுகளை நீக்கி அங்கிருந்த பொருட்களை மீட்க உதவினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சேலத்தில் பெய்த தொடர் மழையினால் கண்ணன் வசித்து வந்த வீட்டின் சுவர் முழுவதுமாக நனைந்து கீழே விழும் நிலையில் இருந்தது தெரியவந்தது.
மேலும் இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story