மொரப்பூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.45 லட்சம் முறைகேடு முன்னாள் சங்க செயலாளர் உள்பட 4 பேர் கைது
மொரப்பூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.45 லட்சம் முறைகேடு முன்னாள் சங்க செயலாளர் உள்பட 4 பேர் கைது
மொரப்பூர், நவ.26-
மொரப்பூர் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.45 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் சங்க செயலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
முறைகேடு
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே மருதிப்பட்டி கிராமத்தில் கீழ் மொரப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதையடுத்து கூட்டுறவு துறை தணிக்கையாளர்கள் மூலம் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் சங்கத்திற்கு உண்மையாக வந்த வரவு தொகைகளை குறைத்து வரவு வைத்தல், பணியாளர்கள் மேல் தனிக்கடன் வழங்கியதாக கணக்கு காட்டுதல், சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட்டதில் நிதி முறைகேடு மற்றும் ஒரு மாதத்திற்கு 2 முறை சம்பளம் எடுத்தது என பல வகைகளில் ரூ.45 லட்சத்து 31 ஆயிரத்து 472 முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
கைது
இதுகுறித்து கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் மணிகண்டன், வணிக குற்றப்புலனாய்வு துறையினரிடம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்குப்பதிவு செய்து கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அப்போதைய சங்க செயலாளர் பொன்னுசாமி, கீழ் மொரப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அப்போதைய எழுத்தர்கள் சிவலிங்கம், கருணாநிதி மற்றும் அப்போதைய சங்கத்தலைவர் பார்த்திபன் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.
மொரப்பூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட சங்க செயலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story