வேப்பனப்பள்ளி அருகே, தரைப்பாலம் உடைந்ததால் ஆற்றில் கயிறு மூலம் மறுகரைக்கு செல்லும் கிராம மக்கள்


வேப்பனப்பள்ளி அருகே, தரைப்பாலம் உடைந்ததால் ஆற்றில் கயிறு மூலம் மறுகரைக்கு செல்லும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 25 Nov 2021 8:26 PM GMT (Updated: 2021-11-26T01:56:28+05:30)

வேப்பனப்பள்ளி அருகே, தரைப்பாலம் உடைந்ததால் ஆற்றில் கயிறு மூலம் மறுகரைக்கு செல்லும் கிராம மக்கள்

வேப்பனப்பள்ளி, நவ.26-
வேப்பனப்பள்ளி அருகே தரைப்பாலம் உடைந்ததால் ஆற்றில் கயிறு கட்டி மறுகரைக்கு கிராம மக்கள் சென்று வரும் அபாய நிலை உள்ளது.
தற்காலிக தரைப்பாலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே இனாம் குட்டப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் வேப்பனப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வேப்பனப்பள்ளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இனாம் குட்டப்பள்ளியில் உள்ள தற்காலிக தரைப்பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். தினந்தோறும் ஆற்றில் இறங்கி பாய்ந்தோடும் நீரில் கயிறு கட்டி மற்றொரு பக்கத்திற்கு ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் முதல் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். ஆற்றில் தண்ணீரின் அளவு அடிக்கடி அதிகரிப்பதால் சில நேரங்களில் கரையை கடக்க முடியாமல் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சாலை வசதி
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இனாம் குட்டப்பள்ளி கிராமத்தில் இருந்து வேப்பனப்பள்ளி பிரதான சாலைக்கு 1 கி.மீட்டர் உள்ளதால் இதுவரை கிராமத்திற்கு சாலை வசதி அமைக்கப்படவில்லை. இந்த கிராமத்திற்கு சாலை வசதி மற்றும் ஒரு தரைப்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இனாம் குட்டப்பள்ளி கிராமத்தின் மீது கவனம் செலுத்தி கிராம மக்களின் பலநாள் கோரிக்கையான தரைப்பாலம் மற்றும் சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story