ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணி கேட்டு பொட்டிபுரத்தில் பொதுமக்கள் சாலைமறியல்


ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணி கேட்டு பொட்டிபுரத்தில் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 26 Nov 2021 2:27 AM IST (Updated: 26 Nov 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணி கேட்டு பொட்டிபுரத்தில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஓமலூர், 
ஊரக வேலை உறுதித்திட்டம்
ஓமலூரை அடுத்த பொட்டிபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனர். தற்போது பண்ணை குட்டை அமைத்தல், மண் மற்றும் கற்களால் கரை அமைக்கும் பணியும், மழைநீர் சேகரிப்பு குட்டை அமைக்கும் பணியும் இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பொட்டிபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ஒரு பகுதி மக்களுக்கு மட்டும் வேலை வழங்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வேலை கிடைக்காத பெண்கள் உள்பட பொதுமக்கள் நேற்று ஊரக வேலை உறுதித்திட்ட பணி வழங்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி மற்றும் ஊராட்சி செயலாளர் தன்ராஜ் ஆகியோரிடம் முறையிட்டனர்.
சாலைமறியல்
ஆனால் அவர்கள் பணி ஒதுக்கீடு செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
பின்னர் ஓமலூர்- தின்னப்பட்டி ரோட்டில் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற ஓமலூர் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

Next Story