சேலத்தில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித்தொகை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
சேலத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் வீடுகள் தரைமட்டமாகி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித்தொகையை கலெக்டர் கார்மேகம் நேற்று வழங்கினார்.
சேலம்
6 பேர் பலி
சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன்விட்டல் தெருவில் கோபி என்பவரின் வீட்டில் கடந்த 23-ந் தேதி கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் கோபி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது. இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு அதிகாரி பத்மநாபன், அவரது மனைவி தேவி மற்றும் கார்த்திக் ராம், எல்லம்மாள், ராஜலட்சுமி ஆகிய 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சத்திற்கான நிவாரண தொகைக்கான காசோலைகளை சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் சென்று வழங்கினார்.
காயம் அடைந்தவர்களுக்கும் நிவாரணம்
இதைத்தொடர்ந்து படுகாயமடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 13 பேருக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.31 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் கார்மேகம், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.
அப்போது சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story