சேலத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு
சேலத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடுகள் தரைமட்டமான விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
சேலம்
5 பேர் பலி
சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் விட்டல் 3-வது தெருவில் கோபி (வயது 52) என்பவர் பலகார கடை நடத்தி வந்தார். இவரது வீட்டில் கடந்த 23-ந் தேதி கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் கோபி வீடு உள்பட 6 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த பயங்கர விபத்தில் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராக பணியாற்றிய பத்மநாபன், அவருடைய மனைவி தேவி உள்பட 5 பேர் பலியாகினர்.
மேலும் ஒருவர் சாவு
மேலும் படுகாயம் அடைந்த கோபி உள்பட 13 பேருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கோபி பரிதாபமாக இறந்தார். இதன்மூலம் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது.
இந்த விபத்து குறித்து சேலம் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து வீடுகள் தரைமட்டமான இடத்தில் தடயவியல் உதவி இயக்குனர் வடிவேல் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கண்காணிப்பு கேமரா
இதனிடையே விபத்து ஏற்பட்ட தெருவில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். குறிப்பாக சம்பவத்தன்று காலை 6.06 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடிப்பதும், அதைத்தொடர்ந்து அந்த தெருவே புகை மண்டலமாக காட்சியளிக்கும் கேமரா பதிவை போலீசார் பார்வையிட்டனர்.
மேலும் இந்த விபத்தை அடுத்து எழுந்த பயங்கர சத்தத்தை கேட்டு அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து பார்க்கும் காட்சியும், சம்பவம் நடப்பதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்னதாக அந்த இடத்தை பள்ளி மாணவி ஒருவர் சைக்கிளில் கடந்து செல்வது போன்ற காட்சியும் கேமராவில் பதிவாகி உள்ளது.
தற்போது இந்த வீடியோ காட்சி வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story