100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Nov 2021 2:37 AM IST (Updated: 26 Nov 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

திருச்சி
திருச்சி வயலூர் ரோடு ராமலிங்கநகர் பகுதியில் ஒரு வீட்டில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ராமலிங்கநகர் 5-வது குறுக்குத்தெருவில் பக்ருதீன் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பதும், அவருடைய வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதும் தெரிய வந்தது. உடனே போலீசார் பக்ருதீனின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த அவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 
இதைத்தொடர்ந்து போலீசார் பக்ருதீனின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். சோதனையில் அங்கு மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அங்கு 20 மூட்டைகளில் இருந்த புகையிலை பொருட்களை ஒரு லாரியில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 100 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பக்ருதீனை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story