கர்நாடக அரசை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் - கவர்னர் கெலாட்டிடம் காங்கிரஸ் தலைவர்கள் பரபரப்பு கடிதம்


கர்நாடக அரசை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் - கவர்னர் கெலாட்டிடம் காங்கிரஸ் தலைவர்கள் பரபரப்பு கடிதம்
x
தினத்தந்தி 25 Nov 2021 10:24 PM GMT (Updated: 25 Nov 2021 10:24 PM GMT)

ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் கேட்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் கர்நாடக அரசை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரி கவர்னரிடம் காங்கிரஸ் தலைவர்கள் பரபரப்பு கடிதம் வழங்கியுள்ளனர்.

பெங்களூரு:

40 சதவீத கமிஷன்

  கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம், கர்நாடக அரசு மீது 40 சதவீத கமிஷன் கேட்பதாக பரபரப்பு புகாரை கூறியுள்ளது. இதுகுறித்து ஒரு கடிதத்தை அந்த சங்கத்தினர் பிரதமர் மோடிக்கு அனுப்பினர். அந்த கடிதத்தை, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு பிரதமர் மோடி அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி உயர் அதிகாரிகளுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த நிலையில் கர்நாடக கவர்னர் கெலாட்டை பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினர். 40 சதவீத கமிஷன் பெறுவதாக புகார் எழுந்துள்ளதால் கர்நாடக அரசை அரசியல் அமைப்பின் 356-வது பிரிவை பயன்படுத்தி கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய கோரி கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஊழல் தலைவிரித்தாடுகிறது

  கர்நாடக அரசின் 2021-22-ம் ஆண்டின் நிதிநிலை ரூ.2.47 லட்சம் கோடி. இந்த நிதியின் பாதுகாவலர் மாநில அரசு ஆகும். இந்த நிதியை பயன்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. இந்த நிதியை மாநில மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் செலவழிக்க வேண்டும். கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம், பொதுப்பணி, நீர்ப்பாசனம், சுகாதாரம், பெங்களூரு மாநகராட்சி திட்ட பணிகளுக்காக மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 40 சதவீத கமிஷன் வழங்க வேண்டியுள்ளதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது. இது லஞசம் ஆகும்.

  அந்த சங்கத்தினர் கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கடிதத்தை இணைத்துள்ளோம். அரசு துறைகளில் ஊழல் தலைவரித்தாடுகிறது என்பதற்கு இந்த கடிதமே சாட்சி ஆகும்.

மக்கள் கோபம்

  இந்த கடிதம் கிடைத்த பிறகும் மாநில அரசு மீது பிரதமர் மோடி உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை. இதன் மூலம் மத்திய அரசு ஊழல் விஷயத்தில் சமரசம் செய்து கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது. அதே போல் கர்நாடக அரசு, மாநில போலீஸ், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட எந்த துறையும் தாமாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  இந்த ஊழல் புகார் கர்நாடக மக்களின் மனதில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ஒப்பந்ததாரர்கள் ஹேக்கர்களை பயன்படுத்தி அரசின் டெண்டர் விவரங்களை திருடியதாகவும் புகார் எழுந்தது. இதன் பின்னணியில் சில மந்திரிகள் இருப்பதாக அந்த ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. அரசு அதிகாரி சைலஜா என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார். அந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

கலைக்க பரிந்துரை

  அரசின் மொத்த ஆண்டு பட்ஜெட்டில் 40 சதவீத கமிஷனை கூட்டி கழித்து பார்ததால் 1.50 லட்சம் கோடி சம்பளம், கடனை திருப்பி செலுத்துதல் போன்ற பணிகளுக்கு செலவழிக்கப்படுகிறது. வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி மட்டுமே கிடைக்கிறது. கர்நாடக அரசின் துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இந்த ஊழலால் அரசின் கருவூலத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் பணத்தை சில மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விழுங்கியுள்ளனர். இது கர்நாடகத்தில் அரசியல் அமைப்பு சட்டம் சிதைந்துவிட்டதை காட்டுகிறது.

  அதனால் நீங்கள், அரசியல் அமைப்பு சட்டம் 356-வது பிரிவை பயன்படுத்தி கர்நாடக அரசை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் புகார் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கர்நாடக போலீசார் இந்த புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.
  இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story