சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி நெட்டப்பாக்கத்தில் பொதுமக்கள் மறியல்
சேதமடைந்த சாலை, வடிகால் வாய்க்காலை சீரமைக்கக்கோரி நெட்டப்பாக்கத்தில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெட்டப்பாக்கம், நவ.
சேதமடைந்த சாலை, வடிகால் வாய்க்காலை சீரமைக்கக்கோரி நெட்டப்பாக்கத்தில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குண்டும் குழியுமான சாலை
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கரியமாணிக்கம் இந்திராநகர், புதுகாலனி ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள தார்சாலைகள், வடிகால் வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இதனால் சாலைகள் மற்றும் வடிகால் வாய்கால்கள் சேதமடைந்துள்ளன.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், ஏற்கனவே சேதமடைந்த சாலைகள் மிகவும் மோசமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சாலை எது, பள்ளம் எது என்று தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் நடந்து கூட செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாலைமறியல்
இது குறித்து கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கரியமாணிக்கம் பகுதி மக்கள் நேற்று காலை 10 மணியளவில் நெட்டப்பாக்கம் நான்குமுனை சந்திப்பில் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது பொதுமக்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் மடுகரை - புதுச்சேரி சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story