தேனியில் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் 60 பேர் கைது


தேனியில் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு  தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்  60 பேர் கைது
x
தினத்தந்தி 26 Nov 2021 6:58 PM IST (Updated: 26 Nov 2021 6:58 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் ஊர்வலமாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி:
அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும் கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஒரு ஆண்டு காலம் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்படி தேனி பங்களாமேட்டில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.யு.டி.யு.சி., அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேற்று மாலையில் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டனர். ஆனால், ஊர்வலம் செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
சாலை மறியல்
ஆனால் தொழிற்சங்கத்தினர் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மதுரை சாலையில் அமர்ந்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்து தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் இரவில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story