30 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்


30 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்
x
தினத்தந்தி 26 Nov 2021 8:17 PM IST (Updated: 26 Nov 2021 8:17 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் பகுதியில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 30 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.

கோட்டூ:
கோட்டூர் பகுதியில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 30 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. 
தற்காலிக நெல் கொள்முதல் நிலையம்
மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டம் முழுவதும் குறுவை சாகுபடி அதிக பரப்பளவில் நடைபெற்றது. மேலும்  மகசூலும் அதிகரித்தது. இதையடுத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவு திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த  கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஊராட்சி தோறும் தற்காலிக கொள்முதல் நிலையங்களை திறந்தது. கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை விவசாயிகள் திறந்தவெளியில் வைத்திருந்தனர். அறுவடை முடிந்து 2 மாதங்களாகியும் கொள்முதல் செய்த நெல்மூட்டைகள் அங்கிருந்து எடுத்து செல்லவில்லை. தற்போது நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. 
மழையில் நனைந்து வீணாகும் நெல்மூட்டைகள்
மேலும் கோட்டூர் பகுதிகளான நருவெளிக்களப்பால், குலமாணிக்கம், சேந்தமங்கலம், கீழபுழுதிக்குடி, ஈனக்குடி, இருள்நீக்கி, காடுவாக்குடி, சேரி, மேலகண்டமங்கலம், மீனம்மநல்லூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையில் நனைந்து வீணாகி வருகிறது. எனவே அனைத்து நெல்மூட்டைகளையும் உடனடியாக எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்்த பகுதி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story