திருத்தணி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகம் ஜப்தி


திருத்தணி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகம் ஜப்தி
x
தினத்தந்தி 26 Nov 2021 9:20 PM IST (Updated: 26 Nov 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டது.

வழக்கு தொடர்ந்தார்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவை சேர்ந்த மணவூர் ஊராட்சியில் வசித்து வருபவர் செல்வராணி. விவசாயி. இவருக்கு சொந்தமாக 1½ ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 1999-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் விலைக்கு வாங்கினார்கள்.

இதில் அந்த இடத்திற்கு கொடுக்க வேண்டிய தொகையில் பாதி தொகையை மட்டும் கொடுத்துவிட்டு இடத்தை கையகப்படுத்தி கொண்டார்கள். அதற்கான மீதி தொகையை கடந்த 10 ஆண்டுகளாக 2011 ஆண்டு வரை வழங்காமல் விவசாயி செல்வராணியை அலைக்கழித்து உள்ளனர். இதனையடுத்து செல்வராணி திருவள்ளூர் சார்பு கோர்ட்டில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

ஜப்தி

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் சார்பு கோர்ட்டு உத்தரவின் பேரில் திருத்தணி சார்பு கோர்ட்டு நீதிபதி காயத்ரி தேவி ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவில் செல்வராணி இழப்பீட்டு தொகை ரூ.9 லட்சத்து 59 ஆயிரத்து 631 தர வேண்டும், இதற்கு வட்டி ரூ.3 லட்சத்து 78 ஆயிரத்து 576 தர வேண்டும். மொத்த தொகை ரூ.13 லட்சத்து 38 ஆயிரத்து 225 வழங்க வேண்டும்.

இல்லை என்றால் அந்த அலுவலகத்தில் உள்ள 10 நாற்காலி, 10 கம்ப்யூட்டர், 10 மேசை, 10 பீரோ, தனி தாசில்தார் ஜீப் போன்றவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று ஊழியர்கள் அங்கு சென்று அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜீப்பை தவிர மற்ற பொருட்களை ஜப்தி செய்தனர்.


Next Story