மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறைகள்


மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறைகள்
x
தினத்தந்தி 26 Nov 2021 9:48 PM IST (Updated: 26 Nov 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரும்பாறை: 


கொட்டித்தீர்த்த கனமழை
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் சுமார் 6 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியது. இதில் மலைக்கிராமங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மஞ்சள்பரப்பு-புல்லாவெளி இடையேயான மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மரத்தை அகற்றினர். அதன்     பிறகு போக்குவரத்து தொடங்கியது. 
இதற்கிடையே பெரும்பாறை பகுதியில் கனமழையால் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. புல்லாவெளி-ஏணிக்கல் இடையேயான மலைப்பாதையில் நேற்று காலை 2 இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த வாகனங்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன. 

பாறைகள் அகற்றம்
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் தலைமையிலான சாலை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொக்லைன் எந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாறையை வெடிவைத்து தகர்த்தனர். பின்னர் பாறை துகள்களை அகற்றி, மலைப்பாதையை சீரமைத்தனர். அதைத்தொடர்ந்து புல்லாவெளி-ஏணிக்கல் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது. 

இதேபோல் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் உள்ள வடகரைபாறை என்ற பகுதியில் மரம் ஒன்று சாய்ந்தது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, மலைப்பாதையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். 

Next Story