கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்
பாலியல் புகாரில் சரண் அடைந்த கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர்.
திண்டுக்கல்:
பாலியல் புகார்
திண்டுக்கல்-பழனி சாலையில் முத்தனம்பட்டி அருகே தனியார் நர்சிங், கேட்டரிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருக்கு உடந்தையாக விடுதி வார்டன் அர்ச்சனா என்பவர் இருந்ததாகவும் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தாடிக்கொம்பு போலீசில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் அர்ச்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கல்லூரி தாளாளரை கைது செய்ய போலீசார் செல்வதற்குள் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கோர்ட்டில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் சரண் அடைந்தார்.
திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்
அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜோதிமுருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தாடிக்கொம்பு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து அவரை திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் போளூர் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர்.
அப்போது ஜோதிமுருகனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தாடிக்கொம்பு போலீசார் அனுமதி கேட்டனர். அதன்பேரில் கல்லூரி தாளாளரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜோதிமுருகனை போலீசார் காவலில் எடுத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு
கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் போது மாணவ-மாணவிகள் திரண்டு போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வரும் அனைத்து வழிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சந்தேகப்படும்படி அந்த வழியாக செல்பவர்களை நிறுத்தி விசாரணை செய்த பின்னரே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.
அதேபோல் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் ஜோதிமுருகனை கோர்ட்டின் வழக்கமான நுழைவு வாயில் வழியாக அழைத்து வராமல் கோர்ட்டின் பின்புறம் உள்ள வாசல் வழியாக அழைத்து வந்து மகிளா கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story