ஆறுகளில் வெள்ளப்பெருக்கு


ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 26 Nov 2021 4:42 PM GMT (Updated: 26 Nov 2021 4:42 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இங்குள்ள பாலாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, சருகணியாறு, வைகையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கல்லல், 
 சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இங்குள்ள பாலாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, சருகணியாறு, வைகையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தொடர்மழை
 கல்லல் அருகே அரண்மனைசிறுவயல் பகுதியில் இருந்து காளையார்கோவில் செல்லும் சாலையின் குறுக்கே சருகணியாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே பஸ் போக்குவரத்திற்காக தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்குபிறகு சருகணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு  தரைப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.  இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இந்த ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் ரூ.10கோடியே 34லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் அதற்கான பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
போக்குவரத்து துண்டிப்பு
தற்போது ஏறக்குறைய 80 சதவீதம் வரை பணி நிறைவு பெற்ற நிலையில் தொடர் மழை காரணமாக இந்த பணிகள் கடந்த 25 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த வழியாக காரைக்குடி, கல்லல், காளையார்கோவில், இளை யான்குடி, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.  பரமக்குடியில் இருந்தும் போக்குவரத்து  நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக வெற்றியூர் நான்கு ரோடு வழியாக நடராஜபுரம், பணங்குடி பாகனேரி, கல்லல் வழியாக காரைக்குடிக்கு வாகனங்கள் மாற்றிவிடப்பட்டன. தற்போது ஆற்றின் குறுக்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து பொதுப் பணித்துறை சார்பில் தரைப்பாலத்தின் நுழைவு பகுதியில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் செல்லாத வண்ணம் தடுப்பை ஏற்படுத்தி உள்ளனர். 
எச்சரிக்கை
மேலும் சில இடங்களில் வெள்ளம் அதிகமாக செல்வதால் இந்த வழியாக யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பும் செய்தனர். இதேபோல் கல்லல் அருகே செவரக்கோட்டை பகுதியில் உள்ள மணிமுத்தாற்றின் அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது நிரம்பி செல்கிறது. காரைக்குடி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக காரைக்குடி ரெயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் அந்த வழியாக சென்ற போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  தொடர் மழை காரணமாக காரைக்குடி நாட்டார் கண்மாய் நிரம்பி மறுகால் செல்கிறது.  இதில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வலை, ஊத்தா உள்ளிட்ட சாதனைங்களை வைத்து மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story