மராட்டியத்தில் மார்ச் மாதம் பா.ஜனதா ஆட்சி அமையும் நாராயண் ரானே சொல்கிறார்
மராட்டியத்தில் மார்ச் மாதம் பா.ஜனதா ஆட்சி அமையும் என மத்திய மந்திரி நாராயண் ரானே கூறியுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் மார்ச் மாதம் பா.ஜனதா ஆட்சி அமையும் என மத்திய மந்திரி நாராயண் ரானே கூறியுள்ளார்.
2 ஆண்டுகள் நிறைவு
மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொள்கைகளில் மாறுபட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. கொரோனா தொற்று, அண்டிலா வெடிகுண்டு கார் வழக்கு, அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. போன்ற விசாரணை முகமைகளால் கொடுக்கப்படும் நெருக்கடி, வலுவான எதிர்க்கட்சியான பா.ஜனதாவை சமாளித்து அந்த கூட்டணி இன்றுடன்(சனிக்கிழமை) 2 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ய உள்ளது.
இதில் கொரோனா தொற்று ஆட்சி நீடிக்க ஒருவகையில் காரணமாக அமைந்துவிட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பா.ஜனதா ஆட்சி
இந்தநிலையில் வரும் மார்ச் மாதம் மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் என மத்திய மந்திரி நாராயண் ரானே கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் மார்ச் மாதம் பா.ஜனதா ஆட்சி அமையும். ஆட்சியை கலைப்பதும், புதிய அரசை அமைப்பதும் ரகசியமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. எனவே அதுபற்றி பொது வெளியில் அதிகமாக விவாதிக்க முடியாது. இதுகுறித்து மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஏற்கனவே பேசிவிட்டார். அது நடக்கும் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இதேபோல மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் ஆகியோரும் டெல்லியில் தான் உள்ளனர்.
இந்த நேரத்தில் மராட்டியத்தில் மார்ச் மாதம் பா.ஜனதா ஆட்சி அமையும் என நாராயண் ரானே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்தது
இதற்கிடையே நாராயண் ரானே பேச்சு குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறுகையில், "மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். பா.ஜனதா பெரிய, பெரிய கணிப்புகளை கூறும். ஆனால் அது எதுவும் நடக்காது. யாரும் பா.ஜனதாவை நம்பமாட்டார்கள்." என்றார்.
அதே நேரத்தில் தங்கள் கட்சி தலைவர்கள் ஒரே நேரத்தில் டெல்லியில் முகாமிட்டு இருப்பதை பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கின்றனர். எனினும் தேவேந்திர பட்னாவிசும், சந்திரகாந்த் பாட்டீலும் கட்சி விவகாரம் குறித்து மத்திய தலைமையுடன் பேச டெல்லி சென்றதாக பா.ஜனதா தலைவர் ஒருவர் கூறினார்.
இதேபோல சரத்பவார் நாடாளுமன்ற பாதுகாப்பு துறை நிலைக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story