கொள்கை ரீதியிலான பிரச்சினைகளில் கட்சி தலைமை அனுமதியின்றி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் செயல்படக்கூடாது


கொள்கை ரீதியிலான பிரச்சினைகளில் கட்சி தலைமை அனுமதியின்றி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் செயல்படக்கூடாது
x
தினத்தந்தி 26 Nov 2021 10:19 PM IST (Updated: 26 Nov 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

கொள்கை ரீதியிலான பிரச்சினைகளில் கட்சி தலைமை அனுமதியின்றி செயல்படக்கூடாது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

புதுச்சேரி, நவ.
கொள்கை ரீதியிலான பிரச்சினைகளில் கட்சி தலைமை அனுமதியின்றி செயல்படக்கூடாது என்று  பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
வாக்குவாதம்
புதுவையில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பாதது, மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தாதது, மழை வெள்ள பாதிப்புகளை குறைத்து மதிப்பிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலாளரை சந்தித்து பேசினார்கள்.
அப்போது அவர்கள் இதுதொடர்பாக தலைமை செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அரசு செயலாளர்களின் செயல்பாடும் மோசமாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார்கள்.
பா.ஜ.க. அதிர்ச்சி
இந்த சந்திப்புக்கு பின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர்கள் கவர்னர் மாளிகை, நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று கூறினார்கள். புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களே தலைமை செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஆளுங்கட்சி வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இது பா.ஜ.க.வினரிடைய கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களே இவ்வாறு செயல்பட்டால் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழக்க நேரிடும் என்று பா.ஜ.க. மேலிடம் கருதுகிறது. எனவே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாநில தலைமைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எச்சரிக்கை
இந்தநிலையில்     பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், சிவசங்கரன், அசோக்பாபு, வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. மத்திய, மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்ற கட்சி தலைமையின் எச்சரிக்கை எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவிக்கப்பட்டது. கொள்கை ரீதியிலான பிரச்சினைகளில் கட்சி தலைமையின் அனுமதியின்றி செயல்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே கூட்டம் தொடர்பாக பா.ஜ.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழை காரணமாக புதுவை மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story