பேரணாம்பட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்


பேரணாம்பட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Nov 2021 4:52 PM GMT (Updated: 26 Nov 2021 4:52 PM GMT)

பேரணாம்பட்டில் ஏரிநீரை வெளியேற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டில் ஏரிநீரை வெளியேற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் எதிர்ப்பு

பேரணாம்பட்டு ஒன்றியம் ஏரிகுத்தி ஊராட்சியில் உள்ள ஏரி பகுதியில் சிலர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வருவாய்த்துறையினர் பட்டா வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஏரி நிரம்பி உபரி நீர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து 25 வீடுகள் மூழ்கி சேதமடைந்தன.

 இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் ஏரி கோடி போகும் வழியில் பொக்லைன் மூலம் ஒரு சிறு கால்வாய் அமைத்து ஏரியின் உபரி நீரை கொட்டாற்றில் திருப்பி விடும்பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் கால்வாய் தோண்டி ஏரி நீரை வெளியேற்ற கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாலை மறியல்

 இதனால் நடவடிக்கை எடுக்கக்கோரி பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் குடியாத்தம் செல்லும் சாலையில் திடீரென பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன், ஒன்றிய ஆணையாளர் பாரி, தி.மு.க. செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட் உள்ளிட்டோர் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் ஏரிக்கு சென்று பார்வையிட்டு இன்று (சனிக்கிழமை) காலை ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் செல்லாதவாறு பாதுகாப்பாக வெளியேற்றி கொட்டாற்றில் கலந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story