கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை


கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 26 Nov 2021 10:32 PM IST (Updated: 26 Nov 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பெலாந்துறையில் 118.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கடலூர், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏற்கனவே பல நூறு ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. மனித உயிர்கள், கால் நடைகள் பலியாகி உள்ளன. வீடுகளும் இடிந்து சேதமடைந்ததது. இந்நிலையில் குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் வளி மண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

விடுமுறை

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். அதன்படி நேற்று பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. இதற்கிடையில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. சில நேரங்களில் மிதமாகவும், சில நேரங்களில் கன மழையாகவும் பெய்தது.
நேற்றும் இந்த மழை நீடித்தது. நேற்று காலை 9.30 மணிக்கு பிறகு சற்று மழை ஓய்ந்த நிலையில் இருந்தது. அதன்பிறகு மாலை 3.30 மணிக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீர் வடிய ஆரம்பித்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால் அந்த இடங்களில் தண்ணீர் வடிய வசதியின்றி கிடக்கிறது.
இதேபோல் ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், தொழுதூர், சேத்தியாத்தோப்பு, கொத்தவாச்சேரி, வானமாதேவி, புவனகிரி, பரங்கிப்பேட்டை, பண்ருட்டி என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. 

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் கடல் சீற்றம் காரணமாக மறு உத்தரவு வரும் வரை, மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று கடலூர் துறைமுகத்தில் இருந்து விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடலூர் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெலாந்துறையில் 118.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. 

Next Story