வேலூர் மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் வேலூர் மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் வேலூர் மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார சீர்கேடு
வேலூர் காமராஜர் சிலை அருகே போகி பட்டறை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்த பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கால்வாய் தூர்ந்து போய் காணப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் இந்த தெருவில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கி நிற்கும். இந்த பிரச்சினை ஒரு ஆண்டுக்கும் மேலாக உள்ளது.
இந்தநிலையில் தற்போது வேலூரில் பெய்து வரும் மழையால் தெருக்கள் முழுவதும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடாக உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
சாலைமறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் இணைந்து காமராஜர் சிலை சந்திப்பு பகுதியில் நேற்று மாலை திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஏஜாஸ் அகமத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாகீர்உசேன், முகமத்சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கினர்.
மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 நாட்களுக்குள் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்கள். தற்போது கலைந்து செல்லுங்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று கூறினார். தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் போகி பட்டறை பகுதியை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த மறியலால் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாநகராட்சி முற்றுகை
போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் ஒரு ஆண்டுக்கும் மேலாக கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. தெருக்களில் சென்றுவர முடியவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி கமிஷனர் உள்பட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் நடத்தினால் நடத்துங்கள் என்று அலட்சியமாக தெரிவிக்கின்றனர்.
தற்போது அதிகாரிகள் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி உள்ளனர். 8 நாட்களுக்குள் எங்கள் பகுதியில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம். மாநகராட்சியையும் முற்றுகையிடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
Related Tags :
Next Story