அழகாபுரி அணையில் உபரி நீர் திறப்பு; பண்ணப்பட்டி பாலத்தில் சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர்
அழகாபுரி அணையில் உபரி நீர் திறக்கப்பட்டதால் பண்ணப்பட்டி பாலத்தில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.
அரவக்குறிச்சி,
திண்டுக்கல் மாவட்டம் அழகாபுரி அணையின் கொள்ளளவு 27 அடியாகும். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் அணை 24 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரானது குடகனாற்றில் கலக்கிறது.
குடகனாறு திண்டுக்கல் மாவட்டம் அழகாபுரி அணையிலிருந்து சென்று கரூர் மாவட்டத்தில் பண்ணப்பட்டி, ஆத்துமேடு, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், நாகம்பள்ளி ஆகிய பகுதிகள் வழியாக சென்று நாகம்பள்ளி ஊராட்சியில் அமராவதி ஆற்றுடன் கலக்கிறது. தற்போது அழகாபுரி அணையில் திறந்து விடப்பட்ட உபரி நீரானது அரவக்குறிச்சி அருகே பண்ணப்பட்டி சிறிய பாலத்தின் மேல் சீறிப்பாய்ந்து வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும், தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
Related Tags :
Next Story