மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை


மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை
x
தினத்தந்தி 27 Nov 2021 1:11 AM IST (Updated: 27 Nov 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை கொட்டித் தீர்த்தது.

புதுக்கோட்டை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையோடு காற்றழுத்த தாழ்வு நிலையினாலும் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. கடற்கரை பகுதியை கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்திலும் வழக்கத்தை விட இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பின.
 இந்தநிலையில் தெற்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய நேற்று அதிகாலை வரை மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து நேற்று பகலில் மழை தூறியபடி இருந்தது. லேசாக சூரிய வெளிச்சம் தென்பட்டது. விடிய, விடிய பெய்த மழையினால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் மழைநீர் தேங்கி நின்றது.
நிவாரண முகாம்கள்
மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஆங்காங்கே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இதில் ஆலங்குடி ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் 4 பேரும், திருவரங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் 12 பேரும், நெம்மகோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் 11 பேரும், குளத்தூர் தாலுகாவில் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 48 பேரும், துரையரசபுரம் நடுநிலைப்பள்ளியில் 43 பேரும், மேற்பனைக்காடு சமுதாய அரங்கில் 40 பேரும் என 6 நிவாரண முகாம்களில் 158 பேர் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அங்கு ஏற்படுத்தப்பட்டன.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நேற்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் மீன்பிடி தளங்கள் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழையில் குடிசை, ஓட்டு வீடுகள் என 10 வீடுகள் சேதமடைந்தன. மேலும் 6 மாடுகள், 8 ஆடுகள், 6 கன்றுக்குட்டிகள் என மொத்தம் 20 கால்நடைகள் இறந்தன.
கலிங்கி நிரம்பியது
பொன்னமராவதி ஒன்றியம், ஏனாதி கிராமத்தில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பெரிய கண்மாய் கலிங்கி நிறைந்து வழிகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் காணியாளன்கோவில் கரை சார்பில் பாரம்பரிய கரும்பிச்சன் பூசாரி வகையில் உள்ள அடைக்கன் பூசாரி குடும்பத்தார்களால் ஏழுகம்ப தெய்வங்களை வணங்கி தண்ணீர் மீது மலர் தூவப்பட்டது.  இதேபோல் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள மேலைச்சிவபுரி வேந்தன்பட்டி, வார்பட்டு, தொட்டியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய்கள், குளங்கள் நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளியை மழைநீர் சூழ்ந்தது. 


Next Story