தொடர்மழையால் நிரம்பி வழியும் கண்மாய்கள்


தொடர்மழையால் நிரம்பி வழியும் கண்மாய்கள்
x
தினத்தந்தி 27 Nov 2021 1:16 AM IST (Updated: 27 Nov 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த தொடர்மழையினால் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய்கள், அணைகள், நீர்நிலைகள் வெகுவாக உயர்ந்து வருகிறது. 
தொடர்மழையினால் மாவட்டத்தில் உள்ள எண்ணற்ற கோவில் தெப்பக்குளங்களும் வெகுவாக நிறைந்து வருகிறது. நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
ஸ்ரீவில்லிபுத்தூர் 
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல மலைப்பகுதியிலும் மழை பெய்து வருவதாலும் ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து வருகிறது. இந்நிலையில் மம்சாபுரம் வாழைகுளம் கண்மாய் பெருகி விருதுநகர் மாவட்டத்திலேயே பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இருக்கன்குடி 
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் வைப்பாறு மற்றும் அர்ஜுனா நதிகளை இணைத்து தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள  12 ஆயிரம் ஏக்கர் விவசாய  நிலங்கள் பயன்படும் வகையில் அணை கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பருவமழை போதியளவு பெய்யாததால் அணையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. தற்போது சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து  வருகிறது. இதனால் சாத்தூர் பகுதியில் உள்ள அனைத்து பாசன கண்மாய்கள் நிறைந்துள்ளது. அதனால் அங்கிருந்து வெளியேறி வரும் மழை நீர் இருக்கன்குடி அணைக்கு வந்து அணையின் முழு கொள்ளவு 24 அடியில் தற்போது 11 அடியாக உள்ளது. அணையின் உள்பகுதியில் கருவேல மரங்கள்  முளைத்து உள்ளதால் நீர் வரும் வழிகள் அனைத்தும் தடையாக உள்ளது. 
வத்திராயிருப்பு 
வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்தி கோவில், ரஹ்மத் நகர், கிழவன்கோவில், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர், சுந்தரபாண்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக பாதரங்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதால் அருகிலுள்ள வயல்வெளிகளில் தண்ணீர் சென்று ஏராளமான நெற்கதிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
ஆறுதல் 
சேத்தூர் அருகே உள்ள முத்துசாமிபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட கோரையாறு காலனி பகுதியில்  பலத்த மழையினால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தனுஷ் குமார் எம்.பி., ராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் மழைநீர் புகுந்த வீடுகளை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி மழைநீர் வெளியேற ஏற்பாடுகளை செய்தனர். அப்போது  பஞ்சாயத்து துணைத்தலைவர் சந்திரா, ஒன்றிய கவுன்சிலர்கள் அனுஷ்யா, பகத்சிங் உள்பட பலர் உடனிருந்தனர். 
நிரம்பும் கண்மாய்கள் 
தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, செவல்பட்டி, ஏழாயிரம்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கன மழையினால் வல்லம்பட்டி கண்மாய் 6 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பி மறுகால் பாய்கிறது. இக் கண்மாயை நம்பி உள்ள கண்டியாபுரம், பனையடிப்பட்டி, கொம்மங்கிபுரம், மஞ்சள் ஓடைப்பட்டி, ஜெகவீரம்பட்டி, விஜயகரிசல்குளம், கோட்டைப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
தாயில்பட்டி பெரியகுளம் கண்மாய் 15 ஆண்டுக்கு பிறகு நிரம்பியுள்ளது. குகன் பாறையில் உள்ள கண்மாய் நிறைந்துள்ளது. மேலும் செவல்பட்டியில் உள்ள இலந்தை குளம் கண்மாய், பாம்பலம்மன் கண்மாய், விஜயகரிசல்குளம் பாண்டியன்குளம் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளது. 
இடிந்து விழுந்த சுவர் 
சேத்தூர் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் யாதவர் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 62). கூலி தொழிலாளி. இவர் தனது மனைவி ஜீவாவுடன் வசித்து வருகிறார். பலத்த மழையால் நேற்று அதிகாலை இவரின் மண் வீட்டின் பின்புற சுவர் இடிந்து விழுந்தது. இவற்றால் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
 இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்தூர் வருவாய் ஆய்வாளர் அமிர்தராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர். குல்லூர்சந்தை கிராமத்தில் இருந்து அரசகுடும்பன்பட்டி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மழை நீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டனர்.

Related Tags :
Next Story