மழைநீரை வெளியேற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் பெண்ணின் காது அறுப்பு


மழைநீரை வெளியேற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் பெண்ணின் காது அறுப்பு
x
தினத்தந்தி 27 Nov 2021 1:17 AM IST (Updated: 27 Nov 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

மேற்பனைக்காடு பகுதியில் மழைநீரை வெளியேற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் பெண்ணின் காதுகள் அறுக்கப்பட்டது. இதுதொடர்பாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

கீரமங்கலம்
கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு, பேட்டை, ராஜாளி குடியிருப்பு உள்பட அனைத்து பகுதிகளிலும் பெய்த கனமழையால் மழைநீர் செல்ல வரத்து வாய்க்கால்கள் இல்லாததால் மழைநீர் வெளியேற வழியின்றி அப்பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்தது. இதேபோல புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் இப்பகுதியில் கைக்குழந்தையுடன் இருந்த பெண்கள் ஈரமான தரையிலேயே பாய், சாக்கு விரித்து குழந்தைகளை படுக்க வைத்துள்ளனர். இரவு நேரங்களில் தற்காலிகமாக சமுதாய கூடத்தில் தங்கியுள்ளனர்.
பெண்ணின் காதுகள் அறுந்தது
இந்தநிலையில் மேற்பனைக்காடு தெற்கு பகுதியில் உள்ள மாரிமுத்து மனைவி சசிகலா என்பவர் தனது வீட்டை சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற சாலையோர வாய்க்காலை தோண்டியதாக கூறப்படுகிறது. அந்த தண்ணீர் தங்கள் வீட்டுக்கு அருகே வருவதாக கூறி ராஜாஜி மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகியோர் சசிகலாவுடன் பிரச்சினை செய்தனர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சசிகலாவின் 2 காதுகளையும் அறுந்ததாக தெரிகிறது. அவர் காதில் அணிந்திருந்த தோட்டையும் காணவில்லை என்கின்றனர். பின்னர் அவர், அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின்பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாஜி மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 மேற்பனைக்காடு பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்திருப்பதை வெளியேற்ற பலரும் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஊராட்சி நிர்வாகத்தினர் தவித்து வருவதாக கூறுகின்றனர்.


Next Story