ஆனைக்குட்டம் அணையில் விரிசல்; கலெக்டர் ஆய்வு
சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணையில் ஏற்பட்ட விரிசலை தொடர்ந்து கலெக்டர் மேகநாதரெட்டி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணையில் ஏற்பட்ட விரிசலை தொடர்ந்து கலெக்டர் மேகநாதரெட்டி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
தொடர்மழை
வத்திராயிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அங்கிருந்து ஆனைகுட்டம் அணைக்கு தண்ணீர் வர தொடங்கியது. இந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை பெய்த திடீர் மழை காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
அதே நேரத்தில் அணையின் கரை பகுதியில் ஷட்டரின் அருகில் விரிசலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அதிக அளவில் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால் அணைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தண்ணீரை திறந்துவிட அனுமதி கேட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அணை திறக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று காலை 7 மணிக்கு தண்ணீர் அணையில் இருந்து வெளியேறிக்கொண்டு இருந்த நிலையில் ஷட்டரின் அருகில் ஒரு இடத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
நேரில் ஆய்வு
இதனால் பதற்றம் அடைந்த கிராம மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் சுக்கிரவார்பட்டி பகுதியில் உள்ள ஒரு இடத்தில் இருந்து கிராவல் மணலை கொண்டு வந்து பள்ளத்தை தற்காலிகமாக சரி செய்தனர்.
ஆனைகுட்டம் அணையில் ஏற்பட்ட விரிசல் குறித்தும், ஷட்டரின் அருகில் ஏற்பட்ட திடீர் பள்ளம் குறித்தும் கலெக்டர் மேகநாதரெட்டிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காலையில் கலெக்டர் மேகநாதரெட்டி, வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆனைக்குட்டம் அணைக்கு நேரில் வந்தனர். பின்னர் அணையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட விரிசல், ஷட்டர் அருகில் ஏற்பட்ட பள்ளம் ஆகியவற்றை பார்வையிட்ட கலெக்டர் அந்த பகுதியில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டாம் என்றும், 2000 மணல் மூடைகளை தயார் செய்து வரிசல் உள்ள பகுதியில் அடுக்கி வைக்க உத்தரவிட்டார்.
விவசாயிகள் எதிர்ப்பு
அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறையினர் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து 4 ஷட்டர்கள் திறக்கப்பட்ட தண்ணீர் வெளியேறியது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒவ்வொரு முறை மழையின்போதும் அணைக்கு வரும் தண்ணீரை வீணாக வெளியேற்ற வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து ஆணைக்குட்டம் பஞ்சாயத்து தலைவர் முத்துராஜ், சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் அதிவீரன்பட்டி செல்வம், வடமலாபுரம் பஞ்சாயத்து தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க வலியுறுத்தினர். அணைக்கு பாதிப்பு இல்லாத வாறு தண்ணீர் தேக்கி வைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story