தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்படவில்லை-ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தகவல்
தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்படவில்லை என்று மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை
தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்படவில்லை என்று மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக மீனவர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிருந்தா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது கணவர் ராஜ்கிரண் உள்பட சிலர், மீன் பிடிக்க படகில் சென்றனர். கடந்த மாதம் 19-ந்தேதி நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை கப்பல், இவர்களின் படகின் மீது மோதியது. இதில் கடலுக்குள் விழுந்து மாயமான எனது கணவர் ராஜ்கிரண் 2 நாட்களுக்கு பின்பு பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தனர்.
எனது கணவர் உடலை உறவினர்களிடம் காண்பிக்காமல் அடக்கம் செய்தது, அவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து தமிழக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், எனது கணவர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யவும், உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அறிக்கை தாக்கல்
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் கணவர் உடலை மறு பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் கணவர் உடலை மறுபரிசோதனை நடத்திய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
விதிகளை பின்பற்றவில்லை
பின்னர் மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கணவர் உடல் மறு பரிசோதனை செய்ததில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவரது உடலை இலங்கை கடற்படையினர் ஒப்படைக்கும்போது சர்வதேச விதிகளை பின்பற்றி முறையாக ஒப்படைக்கவில்லை. அவரது உடல் மட்டுமல்லாமல், எப்போதும் இலங்கை தரப்பினர் இந்த விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது சர்வதே விதிகளை அவமதிப்பதாகும்.
குறிப்பாக ஒரு உடலை பரிசோதனை செய்தபின், மீண்டும் அந்த உடலை ஒழுங்குபடுத்தி, பாதுகாப்பு முறைகளை பின்பற்றித்தான் ஒப்படைப்பது வழக்கம். அந்த நடைமுறைகள் எதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. எனவே அதுதொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
எதிர்மனுதாரராக சேர்ப்பு
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் மத்திய அரசை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். வழக்கை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story