தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Nov 2021 1:56 AM IST (Updated: 27 Nov 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

பிளாஸ்டிக் கழிவுகளால் சீர்கேடு
தர்மபுரி மாவட்டம் கொப்பகரை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஊருக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குபவர்கள் இந்த பகுதியில் மது அருந்துவிட்டு பிளாஸ்டிக் தம்ளர்களை போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பிளாஸ்டிக் தம்ளர்களால் நிரம்பி வழிகின்றன. இதுதவிர கொசு மற்றும் ஈக்கள் தொல்லை அதிகரித்து விட்டன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் காய்ச்சலுக்கு அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஊர் மக்களின் நலன் கருதி இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏ.பழனி, கொப்பகரை, தர்மபுரி.
கல்லூரி மைதானத்தில் தேங்கும் மழைநீர்
சேலம்  அரசு கலைக்கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. அப்படி தேங்கி கிடக்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி தேங்கி உள்ள மழைநீரை அகற்றவும், வரும் நாட்களில் மைதானத்தில் மழைநீர் தேங்காத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சேலம்.

தர்மபுரி மாவட்டம் தடங்கம் பஞ்சாயத்து நேரு நகரில் உள்ள ராமன் நகர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குளம்போல் தேங்கி உள்ள மழைநீரை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோ.கலைநிதி, தடங்கம், தர்மபுரி.
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா பொட்டனேரி கிராமத்தில் ஆரியன் காட்டு வளவு பகுதியில் தார்சாலை அமைப்பதற்காக சாலையில் ஜல்லிகற்கள் நிரப்பப்பட்டு மண் மட்டும் போடப்பட்டது. 2 மாதங்கள் ஆகியும் சாலையில் தார் ஊற்றப்படவில்லை. தற்போது மழை காரணமாக ஜல்லி கற்கள் மீது போடப்பட்டு இருந்த மண் அரித்து செல்லப்பட்டு ஜல்லிகற்கள் பெயர்ந்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். சிறு சிறு விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. ஜல்லி கற்கள் நிரப்பப்பட்ட உடனேயே தார் ஊற்றப்பட்டு இருந்தால் தற்போது அரசு பணம் வீணாகி இருக்காது. இந்த சாலையும் சேதம் அடைந்து இருக்காது. எனவே ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதை சரிசெய்யவும், அதில் தார் ஊற்றி சாலை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், பொட்டனேரி, சேலம்.
குண்டும், குழியுமான கோவில் சாலை
கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் காட்டு வீரஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கிருஷ்ணகிரி மட்டும் அல்லாது பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலுக்கு செல்லக் கூடிய சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய பக்தர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேஷ், கிருஷ்ணகிரி.

மூடப்படாத பள்ளம் 
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி வடக்கு முனியப்பன் கோவில் 3-வது தெருவில் குடிநீர் இணைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், கருங்கல்பட்டி.

அடிப்படை வசதிகள் வேண்டும்
சேலம் சின்னதிருப்பதி ராஜகணபதி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சாலை, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு ஆகிய அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. மழைக்காலம் என்பதால் இந்த கரடு முரடான மண் சாலையில் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. சாக்கடை கால்வாய் இல்லாத காரணத்தால் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதுபற்றி பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், ராஜகணபதி நகர், சேலம்.

உருக்குலைந்த மின்கம்பம் 
சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா பள்ளத்தாதனூர் இந்திராநகர் காலனியில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்ட் கலவை பெயர்ந்து உருக்குலைந்து காணப்படுகிறது. எந்தநேரத்திலும் மின்கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழைக்காலங்களில் ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வகையில் ஆபத்தான இந்த மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், பள்ளத்தாதனூர், சேலம்.
சரிசெய்யப்பட வேண்டிய குடிநீர் குழாய்
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை 35-வது வார்டு ஜோதிட மெயின் ரோடு கார்பெட் தெருவில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அதனை சரி செய்யவில்லை. உடைந்த குடிநீர் குழாய் வழியாக கிருமிகள் சென்று நோய் தொற்று உருவாகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்து தரவேண்டும்.
-திலீப்குமார், அம்மாபேட்டை, சேலம்.
===
விபத்துக்களை தடுக்க வேகத்தடை வேண்டும்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா பிள்ளாநல்லூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து வண்டிபேட்டை பள்ளி வரை விபத்து பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் அந்த சாலையில் பள்ளிஒன்றும் அமைந்துள்ளது. வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகிறது. எனவே இங்கு விபத்து ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வா, கல்லுப்பாளையம், நாமக்கல்.
===
பெயர் பலகை இல்லாத குடியிருப்பு பகுதிகள்
சேலம் அஸ்தம்பட்டி மண்டலம் 5-வது வார்டுக்கு உட்பட்ட உயிரியல் பூங்கா செல்லும் சாலையில் என்.ஜி.ஜி.ஓ. காலனி எதிர் புறம் அமைந்துள்ள சந்தோஸ்நகர் மற்றும் ரம்யாகார்டன் குடியிருப்பு பகுதிகளுக்கு பெயர் பலகைகள் இல்லை. இதனால் தபால்கார், பொது மக்கள் ஆகியோர் பல இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. இது சம்பந்தமாக பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இன்று வரை நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே குறிப்பிட்ட தெருவிற்கு பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ஊர் பொதுமக்கள், சந்தோஸ்நகர், சேலம்.
===

Next Story