சேலத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


சேலத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 27 Nov 2021 1:56 AM IST (Updated: 27 Nov 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம், நவ.27-
சேலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் 3 ஆயிரத்து 206 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
வேலைவாய்ப்பு முகாம்
சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமை சேலம் சோனா கல்லூரியில் நேற்று நடத்தியது. இந்த முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ், ஏரோஸ்பேஸ் என்ஜினீயர்ஸ், வீ-டெக்னாலஜி, ஹட்சன் எக்ரோ புரோடக்ட்ஸ், ட்ரூ சாய் ஒர்க்ஸ் உள்பட 293 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து படித்த இளைஞர்கள், பெண்கள் என சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் தங்களின் கல்வித்தகுதி மற்றும் விருப்பம், வேலை அடிப்படையில் நிறுவனங்களை தேர்வு செய்து அங்கு நடந்த நேர்காணலில் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் சார்பில் தனித்தனியாக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 206 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
முன்னதாக வேலைவாய்ப்பு முகாமின் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் எத்தனை நபர்கள் வந்துள்ளார்கள்? தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆணையாளர் ஆய்வு
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமையொட்டி அங்கு வந்த இளைஞர்களுக்கு போதுமான இடவசதி செய்யப்பட்டுள்ளது குறித்தும், முறையாக இளைஞர்கள், பெண்களின் விவரங்கள், வேலை அளிக்கும் நிறுவனத்தின் விவரங்கள் பதிவு செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர், வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், தனியார் நிறுவனங்களுக்கு தனித் தனியாக அரங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வருகை தந்த இளைஞர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்படுகிறதா? என்றும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பதிவு செய்ய இடம் வழங்கப்பட்டுள்ளதா? என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், வளாகத்திற்கு வருகை தந்த இளைஞர்களுக்கு வழிகாட்டிட போதிய அளவு தன்னார்வ அமைப்பை சார்ந்தவர்கள் உள்ளார்களா? என்பதையும் ஆய்வு செய்தார்.
இந்ந ஆய்வின்போது, உதவி கலெக்டர் விஷ்ணுவர்தினி, வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் லதா, உதவி பொறியாளர் செல்வராஜ், தாசில்தார் தமிழரசி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story