தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு; வீடு இடிந்து குழந்தை பலி
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. களக்காட்டில் வீடு இடிந்து 3 வயது குழந்தை பலியானது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. களக்காட்டில் வீடு இடிந்து 3 வயது குழந்தை பலியானது.
கனமழை
தென்வங்க கடல் பகுதியில் நீடித்து வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையிலும் மழை தொடர்ந்தது. நெல்லை, அம்பை, சேரன்மாதேவி, பாபநாசம், நாங்குநேரி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதியிலும் காலை 9 மணி வரை சாரல் மழை தூறிக்கொண்டிருந்தது. அதன்பிறகு வெயில் அடித்தது. பின்னர் மதியம் 2 மணி அளவில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது.
வெள்ளப்பெருக்கு
தொடர் மழை காரணமாக பாபநாசம் அணையில் இருந்து ேநற்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் சேர்வலாறு, கடனா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதனுடன் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
இதனால் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தபடி செல்கிறது. காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்வதால் அந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெல்லை மாநகர பகுதியில் பெய்த மழை காரணமாக டவுன் காட்சி மண்டபம் பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக தென்காசி, அம்பை செல்லக்கூடிய பஸ்கள், வாகனங்கள் ராமையன்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டன. நெல்லை டவுன் ஜவகர் பள்ளி சாலை, முகமதுஅலி தெரு, அபிராமி நகர், கிருஷ்ணபேரி, பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளைநகர், பரணிநகர், கிருஷ்ணாபுரம், சேவியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது.
முகாமில் 105 பேர் தங்கவைப்பு
நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் மழைநீர் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. நெல்லையை அடுத்த நடுக்கல்லூர் எம்.ஜி.ஆர். நகர் காலனியில் பெய்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த பகுதியை சேர்ந்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் நடுக்கல்லூர் அரசு ஆதிதிராவிடர் விடுதி முகாமில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் நெல்லை டவுன் நயினார்குளம், புதிய பஸ்நிலையம் அருகே உள்ள வேய்ந்தான்குளம், பாளையங்கோட்டை ஆயன்குளம், டவுன் கிருஷ்ணகிரி குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.
நெல்லை வண்ணார்பேட்டை பரணி நகரில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அங்கு அப்துல்வகாப் எம்.எல்.ஏ. சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் மழைநீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மனகாவலம்பிள்ளை நகரில் வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள், அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அப்துல்வகாப் எம்.எல்.ஏ. உணவு பொட்டலங்கள் வழங்கினார்.
அணைகளில் நீர்மட்டம் உயர்வு
அணைகளின நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, பாபநாசம் அணைக்கு நேற்று வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 139.55 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 140.16 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மாஞ்சோலை பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 30 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் நேற்று முன்தினம் 93.25 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி 100 அடியை எட்டியது. இரவு 8 மணி நிலவரப்படி 101.20 அடியாக இருந்தது. நம்பியாறு அணை நீர்மட்டம் 22.96 அடியாகவும், கொடுமுடியாறு அணை 48 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை 27 அடியாகவும் உள்ளது. நம்பியாறு கொடுமுடியாறு அணைகள் நிரம்பி உள்ளதால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
சீவலப்பேரி ஆற்றுப்பாலம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த மழையால் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வெள்ளமும், தாமிரபரணி வெள்ளமும் சேர்ந்து 35 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் சீவலப்பேரி ஆற்றுப்பாலத்தை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. மருதூர் அணையில் வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடுகிறது.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் யாரும் குளிக்க செல்ல வேண்டாம் என்றும், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
குற்றாலம் அருவி
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால், களக்காடு தலையணையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வீடு இடிந்து குழந்ைத சாவு
களக்காடு அருகே உள்ள கீழப்பத்தையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சூர்யா (29). இந்த தம்பதியின் மகள்கள் ஜோதி (13), அருள்பேபி (3), மகன் பவித்ரன் (11). நேற்று முன்தினம் இரவு சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்பகுதியில் பெய்த மழை காரணமாக, சுரேசின் குடிசை வீடு நேற்று அதிகாலை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் சுரேஷ், சூர்யா, அருள்பேபி ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை அருள்பேபி பரிதாபமாக இறந்தது. மற்ற 2 பேரும் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏர்வாடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்த தொழிலாளி குமார் (47), அம்பேத்கர் நகரை சேர்ந்த இசக்கியப்பன் (58), தளவாய்புரம் யாதவர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி, ராஜபுதூரை சேர்ந்த எட்வின் தனசிங் ஆகிய 4 பேரின் வீடுகளும் மழை காரணமாக இடிந்து விழுந்தன. இதில் அங்கிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம்-81, சேர்வலாறு-50, மணிமுத்தாறு-95, நம்பியாறு-80, கொடுமுடியாறு-70, அம்பை-79, சேரன்மாதேவி-85, நாங்குநேரி-64, ராதாபுரம்-54, களக்காடு- 96, மூலைக்கரைப்பட்டி-93, பாளையங்கோட்டை-107, நெல்லை-77, கடனாநதி-32, ராமநதி-35, கருப்பாநதி- 19, குண்டாறு-7, அடவிநயினார்-27, ஆய்க்குடி-52, செங்கோட்டை-13, தென்காசி-34, சங்கரன்கோவில்-38, சிவகிரி-45.
Related Tags :
Next Story