1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை


1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 27 Nov 2021 2:33 AM IST (Updated: 27 Nov 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

திருவிடைமருதூர் அருகே அடகு கடை சுவரில் துளையிட்டு 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார். இந்த கடையில் 2-வது முறையாக நடைபெற்ற கொள்ளையால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

திருவிடைமருதூர், 
திருவிடைமருதூர் அருகே அடகு கடை சுவரில் துளையிட்டு 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார். இந்த கடையில் 2-வது முறையாக நடைபெற்ற கொள்ளையால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர். 
அடகு கடை
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பைசல்அகமது. இவர் தனது வீட்டின் எதிரே நகை அடகு மற்றும் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். பைசல்அகமது வழக்கம் போல் நேற்று காலை கடையை திறக்க சென்றார். அப்போது கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
கடையின் பின்புறம் சுவரில் துளை போட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கடையில் இருந்த சுமார் 1  கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. ஏற்கனவே இதே கடையில் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் பொருட்களை கொள்ளையடித்து சென்று உள்ளனர். 
2-வது முறையாக
 ஏற்கனவே துளை போட்ட இடத்தில் கான்கிரீட் போடப்பட்டு இருந்தாலும் அதன் அருகே உள்ள இடத்தில் துளை போட்டு மர்ம ஆசாமி கடைக்குள் புகுந்து வெள்ளி பொருட்களை திருடி உள்ளார். வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் தனது முகத்தை கைலியால் மூடி இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளார். இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர் கடை முழுவதும் மிளகாய் பொடியை தூவி உள்ளார்.  
இது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஒரே கடையில் தொடர்ந்து 2-வது முறையாக நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில்   பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story