கொட்டித்தீர்த்த கனமழை
பட்டுக்கோட்டை, ஒரத்தநாட்டில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
ஒரத்தநாடு;
பட்டுக்கோட்டை, ஒரத்தநாட்டில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கனமழை
டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதியில் விடாது கொட்டித்தீர்த்த கன மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஒரத்தநாடு தாலுகாவில் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் பிரதான சாலையில் பாப்பாநாடு பஸ் நிறுத்தம் அருகே சாலையில் பெருமளவில் வெள்ள நீர் தேங்கி உள்ளது. இச்சாலையில் வாகனங்களை இயக்குபவர்கள் தண்ணீர் சூழ்ந்துள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இந்த சாலையில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர். தொடர் மழை காரணமாக வாய்க்கால், ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி இருப்பதால், குழந்தைகள் மற்றும் கால்நடைகளை கவனத்துடன் பராமரிக்குமாறும், தாசில்தார் (பொறுப்பு) தமிழ்ஜெயந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
விட்டு விட்டு கனமழை
திருச்சிற்றம்பலம் பகுதியில் மக்கள் வசிக்கும் தாழ்வான குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. கிராமப்புறங்களில சாலைகள் அரிக்கப்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் சாலைகளை கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு லேசான காற்று வீசியதால் பல இடங்களில் மரங்களும் சாய்ந்து விழுந்தன. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் இடிந்தன
மடத்திக்காடு ஊராட்சி உப்பு விடுதி காலனி குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து நின்றதால் அங்கு வசிக்கும் 2 பேரின் வீடுகள் இடிந்தன. குடியிருப்பில் சூழ்ந்துள்ள தண்ணீரை வாய்க்கால் மூலம் வெளியேற்றுவதற்கு மடத்திக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுதாசினி சுப்பையன், துணைத் தலைவர் சசிகுமார் மற்றும் கிராம மக்கள் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீனவர்கள்
தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டிணம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைபட்டிணம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டிணம், கணேசபுரம் உட்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4500 நாட்டுப் படகுகளும், மல்லிபட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசை படகுகளும் உள்ளன. தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள்
மீனவர்களை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story