கால அவகாசம் முடிந்தும், பெங்களூருவில் 12½ லட்சம் பேர் கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போடவில்லை


கால அவகாசம் முடிந்தும், பெங்களூருவில் 12½ லட்சம் பேர் கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போடவில்லை
x
தினத்தந்தி 27 Nov 2021 3:20 AM IST (Updated: 27 Nov 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

காலஅவகாசம் முடிந்த பின்பும் பெங்களூருவில் கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போடாமல் 12½ லட்சம் பேர் இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா 3-வது அலை உருவாகாமல் தடுக்க தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பெங்களூரு:

கொரோனா தடுப்பூசி

  நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் 2 முறை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் முதற்கட்ட தடுப்பூசி போடும் நபர்கள், 2-வது கட்டமாக தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாமல் அலட்சியமாக இருந்து வருவது தெரியவந்துள்ளது.

  அதன்படி, பெங்களூரு நகரில் 18 வயதுக்கு மேற்பட்ட 91 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கும், 2 முறை கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெங்களூருவில் 18 வயதுக்கு மேற்பட்ட 88 சதவீதம் பேர் முதற்கட்ட கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளனர். 62 சதவீதம் பேர் பெங்களூருவில் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு உள்ளனர். இதன்மூலம் 24 லட்சம் பேர் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர்.

12½ லட்சம் பேர்...

  அவர்களில் 12 லட்சத்து 43 ஆயிரத்து 630 பேர் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு, 2-வது கட்டமாக தடுப்பூசி போடுவதற்கான காலஅவகாசம் முடிந்த பின்பும் கூட இன்னும் 2-வது டோஸ் தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருந்து வருவதை மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளது. தற்போது வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் கொரோனா 3-வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் குழுவினர் எச்சரித்து வருகின்றனர்.

  கொரோனா 3-வது அலை உருவாகாமல் தடுக்க கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம் என்பதால், பெங்களூருவில் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முதற்கட்ட தடுப்பூசி போட்டுவிட்டு, 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான காலஅவகாசம் முடிந்த பின்பும், தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அதிகாரிகள் தீவிரம் காட்டி உள்ளனர்.

மக்கள் அலட்சியம்

  கோவிஷீல்டு தடுப்பூசியை முதற்கட்டமாக செலுத்தியவர்கள், 2-வது கட்ட தடுப்பூசியை 84 நாட்கள் ஆன பிறகு போட வேண்டும். ஆனால் உடல் நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி 2-வது கட்ட தடுப்பூசியை போடாமல் இருந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் தடுப்பூசி போடுவதற்கு நேரம் இல்லாததாலும், தங்களது செல்போனுக்கு வந்த குறுந்தகவலை கவனிக்காத காரணத்தாலும், இதுபோன்று காலஅவகாசம் முடிந்த பின்பும் தடுப்பூசி போடாமல் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா பரவல் குறைந்து விட்டதால், தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் ஆர்வம் இல்லாமல் இருப்பதும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

3-வது அலையை தடுக்க...

  ஆனாலும் பெங்களூருவில் கொரோனா 3-வது அலை உருவாகாமல் தடுக்க வேண்டும் என்றால், மக்கள் கண்டிப்பாக 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு நிபுணர்கள் குழுவினர் எச்சரித்துள்ளனர்.

  இதையடுத்து, சுதாரித்து கொண்டுள்ள மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள், பெங்களூருவில் முதல்முறை கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு, காலஅவகாசம் முடிந்த பின்பும் தடுப்பூசி போடாமல் இருப்பவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  
2-வது கட்ட தடுப்பூசி போடதாவர்களின் விவரம்

மேற்கு மண்டலம் - 2,58,199

தெற்கு மண்டலம் - 2,48992

கிழக்கு மண்டலம் - 2,29686

மகாதேவபுரா மண்டலம் - 1,30,492

ஆர்.ஆர்.நகர் மண்டலம் - 1,24,437

பொம்மனஹள்ளி மண்டலம் - 1,24,340

தாசனஹள்ளி மண்டலம் - 40,350

எலகங்கா மண்டலம் - 87,134

மொத்தம் - 12,43,630

Next Story