பொது இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்: தட்டிக்கேட்ட போலீசார் மீது கல்வீச்சு - 3 பேர் கைது
பொது இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தட்டிக்கேட்ட போலீசார் மீது கல்வீசி தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரம்பூர்,
சென்னை கொடுங்கையூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி நகர் 1-வது தெருவில் வாலிபர்கள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் பிறந்தநாள் கொண்டாடியதுடன், மது குடித்து கொண்டு இருந்தனர்.
இதனை தட்டிக்கேட்ட ரோந்து போலீசார், அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள், கலைந்து செல்லாமல் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். மேலும் கீழே கிடந்த கல்லை எடுத்து போலீசார் மீதும், போலீஸ் வாகனம் மீதும் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் போலீசார் காயம் அடைந்தனர்.
இதற்கிடையில் ரோந்து போலீசார் அளித்த தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த சக போலீசார், தப்பி ஓடிய 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று அவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், வியாசர்பாடி எம்.கே.பி. நகரை சேர்ந்த மார்ட்டின் (வயது 24), ஜான் ஆல்வின் (23), கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரைச் சேர்ந்த கலைச்செல்வன் (27) என்பது தெரிந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story