விவசாயிகள் பயிரிடும் நெல் ரகங்கள் ரேஷன் கடைகளில் கிடைக்க விரைவில் ஏற்பாடு - கலெக்டர் தகவல்


விவசாயிகள் பயிரிடும் நெல் ரகங்கள் ரேஷன் கடைகளில் கிடைக்க விரைவில் ஏற்பாடு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Nov 2021 1:32 PM IST (Updated: 27 Nov 2021 1:32 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிரிடும் நெல் ரகங்கள் ரேஷன் கடைகளில் கிடைக்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள குருபுரம் கிராமத்தில் உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக 5 ஏக்கர் நிலப்பரப்பில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மணிகளை சேமித்து வைப்பதற்காக திறந்தவெளி சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பின் ஜான் வர்கீஸ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன. அந்த நெல் மூட்டைகள் எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யதார்.

குறிப்பாக இந்த மாவட்டத்தில் 6 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக பல புகார்கள் வந்தன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளின் தலையீடு அதிகமாக உள்ளது என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் அரசு அறிவுறுத்தலின்படி தனியார் இடங்களில் நெல் வைக்க வேண்டியதில்லை. அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 54 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு இனியும் எளிதில் நெல் கொள்முதல் செய்வதற்காக வழிமுறைகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 7 நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றில் 37 ஆயிரத்து 217 டன் அளவிற்கு நெல் நேரடி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 15 ஆயிரம் டன் கூடுதல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி இந்த ஆண்டு மட்டும் 54 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டது. நெல் தூற்றும் எந்திரங்கள் புதிதாக இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்மணிகளை பாதுகாக்க இந்த வருடத்தில் 500 தார்பாலின் உறைகள் வாங்கப்பட்டன. சென்ற வருடம் இதே சொர்ணவாரி பருவத்தில் 15 ஆயிரம் டன் கொள்முதல் தான் இருந்தது. இந்த வருடத்தில் 37 ஆயிரத்து 217 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு முன் திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் கிடங்குகளில் நெல் மூட்டைகள் சேமிக்க வைக்கப்பட்டிருந்தன. அதனால் பல்வேறு புகார்கள் வந்தன. அந்த புகார்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்பதற்காக, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், திருத்தணி மற்று செங்குன்றம் பகுதிகளில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இது போதாது என்ற காரணத்தினால் ஊத்துக்கோட்டை வட்டம் குருபுரம் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை திறந்தவெளி சேமிப்பு மையங்கள் இல்லாமல் இருந்தன. இந்த வருடத்தில் தான் முதன்முறையாக திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் சேமிப்பு மையத்தில் நெல் சேமித்து வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அந்த சேமிப்பு மையம் ஆய்வு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி கூடுதலாக ராமஞ்சேரி என்ற இடத்தில் திறந்தவெளி சேமிப்பு மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் செய்கின்ற அதே நெல் நம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக கிடைப்பதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள், வெளியூர் வியாபாரிகள் தலையீடு இருந்தால் மாவட்ட கலெக்டர் அல்லது வேளாண் மற்றும் உழவர் துறைக்கோ விவசாயிகள் தகவல் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மட்டும்தான் இந்த திறந்தவெளி சேமிப்பு மையங்கள் இருந்தது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்திலும் அரசாணையின் அடிப்படையில் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் விவசாயிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் வேகமாக நெல் கொள்முதல், அறுவடை செய்து சேமித்து வைப்பதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு கூறினார்.

இந்த ஆய்வின் போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எபினேசர், வேளாண் இணை இயக்குனர் சம்பத்குமார், துணை இயக்குனர் ராஜேஸ்வரி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சேகர், துணை மேலாளர் மருதநாயகம், திறந்தவெளி சேமிப்பு கிடங்கு பொறுப்பாளர் மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story