‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மழைநீருடன் கழிவுநீர் கலப்பு
தாம்பரம் மாநகராட்சி பம்மல் முத்தமிழ் நகர் மாதவி தெருவில் மழைநீர் குளம் போன்று தேங்கி உள்ளது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தெருவில் ஓடுகிறது. இதனால் மிகுந்த சிரமம் அடைந்துள்ளோம். எனவே இப்பகுதியில் கழிவுநீர் அடைப்பை சரி செய்து தண்ணீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
- மணிகண்டன், பம்பல்.
அம்மா உணவகத்தில் ஒழுகும் மழைநீர்
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் முகப்பேர் கிழக்கு 6-வது பிளாக் 93-வது வார்டில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் சமையல் கூடம், சாப்பிடும் இடம், நுழைவுவாயில் ஆகிய இடங்களில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் இங்கு உணவு சாப்பிடுவோர்களும், பணிபுரியும் ஊழியர்களும் மிகுந்த இன்னல் அடைகின்றனர்.எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நா.கார்த்திக், அம்மா உணவக வாடிக்கையாளர்.
சாலையை உயர்த்தி அமைக்க கோரிக்கை
சென்னையை அடுத்த புழுதிவாக்கம் ஜெயாநகரில் 1 மற்றும் 2-வது தெருக்கள், மற்ற தெருக்களை விட தாழ்வாக இருக்கின்றன. இதனால் சிறு மழை பெய்தால் கூட குளம்போல தண்ணீர் தேங்கி விடுகிறது. இந்த தெருக்களில் சாலையை உயர்த்தி அமைத்திட பலமுறை மனு அளித்திருக்கிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை. மக்கள் நலன் கருதி இச்சாலைகள் உயரம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- பொதுமக்கள், ஜெயாநகர்.
அபாயகரமான மின்கம்பம்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் சுதர்சன் நகர் முதல் தெருவில் உள்ள மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற அபாயத்தில் சரிந்து கிடக்கிறது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்த மின்கம்பத்தை கயிறு மூலம் தாங்கி பிடிக்க செய்திருக்கிறார்கள். மழைநீர் சூழ்ந்து கிடக்கும் இத்தெருவில் மின்கம்பம் விழுந்து பெரும் அசம்பாவிதம் நிகழும் முன்பாக மின்வாரியம் நடவடிக்கையில் இறங்கவேண்டும்.
-சந்தானம், சுதர்சன் நகர்.
கழிவுநீர் கால்வாய் வசதி தேவை
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சி முனுசாமி தெருவில் வசித்துவரும் குடியிருப்புகளுக்கு ஏற்ப கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் தெருவில் நடக்க முடியாத அளவுக்கு கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் கூடிய விரைவில் கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பு வசதிகளை அமைத்து தரவேண்டும் என்பதே எங்களது நீண்டநாளைய கோரிக்கை ஆகும்.
- ர.அஜித்குமார், வரதராஜபுரம்.
சிக்னல் அமைக்கப்படுமா?
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி - வண்டலூர் நெடுஞ்சாலை அருகேயுள்ள ஊரப்பாக்கம் பகுதிக்கு செல்வதற்கு பாதுகாப்பான முறையில் சிக்னல் கம்பம் வசதி இல்லை. இதனால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அச்சத்துடன் சாலையை கடக்கும் நிலை உள்ளது. எனவே தேவையற்ற விபத்துகளை தடுக்கும் நோக்கில் இப்பகுதியில் சிக்னல் கம்பம் நிறுவ நடவடிக்கை வேண்டும்.
- பொதுமக்கள், ஊரப்பாக்கம்.
சாலை படுமோசம்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சாமியார் கேட் முதல் சட்டமங்கலம் வரை உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. குண்டும், குழியுமாகவும், மேடு-பள்ளமாகவும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.எனவே இந்த சாலையை சீரமைத்து தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- வாகன ஓட்டிகள்.
எரியாத மின் விளக்குகள்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த அகரம் தென் மெயின் ரோடு, சேலையூர் பவானி நகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மின் விளக்குகள் எரியாத நிலையில் காட்சி பொருளாக மட்டுமே இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அச்சத்துடன் வெளியே சென்று வரும் நிலை இருக்கிறது.
- பொதுமக்கள், சேலையூர்.
பூங்காவில் தேங்கிய மழைநீர்
சென்னை பழைய பல்லாவரம், பல்லவா கார்டன் பூங்காவில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் பூங்காவில் நடைபயிற்சி செய்ய முடிவது இல்லை. மேலும் இங்கு தேங்கி உள்ள தண்ணீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன. பாம்புகள் நடமாட்டமும் இருக்கிறது. எனவே பூங்காவில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமேஷ், பல்லவா கார்டன்
இணைப்பு சாலை அமைக்கப்படுமா?
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் பஞ்சாயத்தில் உள்ள அமிர்தா கார்டனில் இருந்து படப்பை மற்றும் ஒரகடம் பிரதான சாலையை இணைத்து தந்தால் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே இந்த கோரிக்கையை வைப்பூர் பஞ்சாயத்து நிறைவேற்றி தர வேண்டும்.
- ப.சுப்ரமணியன், அமிர்தா கார்டன் குடியிருப்போர் நல சங்கம்.
அலட்சியம் வேண்டாமே...
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஜி.எஸ்.டி சர்வீஸ் சாலையில் சிறியதாக இருந்த பள்ளத்தை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியப் போக்கால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது அந்த பள்ளம் பெரிதாகி உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்த பின்னர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நினைக்கிறார்களா?
- ஆதங்கத்துடன் வாகன ஓட்டிகள்.
Related Tags :
Next Story