வாக்குச்சாவடி அலுவலர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்
நீலகிரியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டி
நீலகிரியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சிறப்பு சுருக்கமுறை திருத்தம்
நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்படி நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் மேற்கொள்வது போன்றவற்றுக்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களான 370 பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தது.
இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டனர். பெயர் நீக்கம், திருத்தம் போன்றவற்றிற்கு உரிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர். ஊட்டி புனித தெரசா உயர்நிலைப்பள்ளி, புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாம்களை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்தல் ஏற்பாடு
வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது பெயர் உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளவும், திருத்தங்கள் இருந்தால் அதை செய்ய விண்ணப்பிக்க வேண்டும் என்று பொதுமக்களை அறிவுறுத்தினார். முகாம் முடிய உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகள் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. 1,249 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2,201 வாக்குப்பதிவு எந்திரங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 440 எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது.
வாக்குச்சாவடி அலுவலர்கள்
தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது. அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி தேர்தல் நடைபெற்றது. 30 வாக்குப்பதிவு எந்திரங்கள், 30 கட்டுப்பாட்டு எந்திரங்களில் தலா 1000 வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த பணி முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.
தொடர்ந்து நீலகிரியில் பேரூராட்சிகள், நகராட்சிகளில் தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் பணிபுரிவதற்காக வாக்குச்சாவடி அலுவலர்களை உள்ளாட்சிகளில் இருந்து தேர்வு செய்யும் பணி தீவிமாக நடந்து வருகிறது. வாக்குச்சாவடிகள், மண்டல குழு, பறக்கும் படை, கண்காணிப்பு குழு போன்றவற்றுக்கு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்கள். இந்த பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story