நொண்டிமேடு பகுதியில் கலெக்டர் ஆய்வு


நொண்டிமேடு பகுதியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 27 Nov 2021 7:58 PM IST (Updated: 27 Nov 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

நிலச்சரிவு அபாயம் உள்ள நொண்டிமேடு பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஊட்டி

நிலச்சரிவு அபாயம் உள்ள நொண்டிமேடு பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சார வாரியம், காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை, குடிமைப் பொருள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்ற 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். 

நிவாரண முகாம்கள்

மொத்தம் உள்ள 6 தாலுகாக்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை மழைக்காலங்களில் நேரில் பார்வையிட்டு பாதிப்பு ஏதேனும் ஏற்படும்போது அலுவலர்கள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். 

முகாம்களில் தங்க வைக்கப்பட உள்ள மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருப்பில் வைக்க வேண்டும். அங்கு குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் தயாராக இருத்தல் வேண்டும். மலை மாவட்டமாக உள்ளதால் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மரங்கள் விழக்கூடிய வாய்ப்பு உள்ளது. மரங்களை அப்புறப்படுத்த தேவையான எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் ஆய்வு

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கலெக்டர் எஸ்.பி.அம்ரித், நிலச்சரிவு ஏற்பட கூடும் என அபாயகரமான இடமாக கண்டறியப்பட்ட நொண்டிமேடு பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  

ஊட்டி அருகே மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயகரமான பகுதியான மந்தாடா மற்றும் தாழ்வான பகுதியான கேத்தி பாரதி நகரில் கலெக்டர் எஸ்.பி.அம்ரித் நேரில் சென்று வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அங்கு வசித்து வரும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி தாசில்தார் தினேஷ் உடனிருந்தனர்.


Next Story