வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.94½ லட்சம் மோசடி


வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.94½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 27 Nov 2021 2:37 PM GMT (Updated: 27 Nov 2021 2:37 PM GMT)

கோத்தகிரி அருகே வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.94½ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி

கோத்தகிரி அருகே வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.94½ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலி நகைகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஈளாடாவில் தேசியமயமாக்கப்பட்ட பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை சமீபத்தில் சோதனை செய்தபோது போலி நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வங்கி நிர்வாகம் புகார் அளித்தது. அதன்பேரில் துணை சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். 

அதில், வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த கீழ்கோத்தகிரியை சேர்ந்த சிவா(வயது 46), சிலரிடம் இருந்து கவரிங் நகைகளை அடகுக்கு வாங்கி தங்க நகை என்றுக்கூறி பணம் வாங்கி கொடுத்தது தெரியவந்தது. உடனே போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து, அதில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.

பரபரப்பு தகவல்கள்

இதற்கிடையில் நகை மதிப்பீட்டாளர் சிவா, கடந்த ஆகஸ்டு மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். அவரது உதவியுடன் கடந்த 18.7.2018-ந் தேதி முதல் 8.9.2020-ந் தேதி வரை 74 வங்கி கணக்குகளில் 38 வாடிக்கையாளர்கள் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்று உள்ளனர்.

இதுதொடர்பாக 11 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது அவர்கள் பழைய நகை கடன் என்று கூறி போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றதும், பயிர் கடன் உள்ளிட்ட பிற கடன்களுக்கு அந்த பணத்தை மாற்றியதும் தெரியவந்தது.

11 பேர் கைது

மேலும் பணம் எடுப்பு சீட்டு மூலம் பணத்தை எடுத்து பயன்படுத்தி முறையற்ற லாபம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது. வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியதுடன் பணத்தை திரும்ப செலுத்தாமல் வங்கியை ஏமாற்றி உள்ளனர். போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.94 லட்சத்து 45 ஆயிரத்து 500 மோசடி செய்தனர். முதற்கட்டமாக 38 பேரில் 11 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

அவர்கள் விவரம் வருமாறு:-
கோத்தகிரி அருகே சுள்ளிக்கூடு கிராமத்தை சேர்ந்த ரவி (40), மகாலிங்கம் (36), மகாதேவன் (53), கணேஷ் (30), அம்மன் நகரை சேர்ந்த சுதாகர் (43), காக்காசோலையை சேர்ந்த கனகராஜ் (30), காடக்கோடு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40), கதகட்டி கிராமத்தை சேர்ந்த லிங்கராஜ் (52), கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த சேகர் (50), அறைஹட்டியை சேர்ந்த சுமதி (40), நடராஜ் (46).

சிறையில் அடைப்பு

இவர்களை கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 27 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோடநாடு எஸ்டேட், கர்சன் எஸ்டேட் வங்கி கணக்கு பேங்க் ஆப் இந்தியா ஈளாடா கிளையில் உள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் எளிதில் பணம் எடுக்க வசதியாக கோடநாட்டில் ஏ.டி.எம். மையத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story