அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்


அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 27 Nov 2021 8:11 PM IST (Updated: 27 Nov 2021 8:11 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் வீணாவதை தடுக்க அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தளி
தண்ணீர் வீணாவதை தடுக்க அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமராவதி அணை
மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் உற்பத்தியாகும் காவிரிஆற்றின் துணை நதிகளில் ஒன்றான அமராவதி ஆற்றை தடுத்து கட்டப்பட்டது அமராவதி அணை. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு 9 கிலோமீட்டர் சுற்றளவில் 90 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த அணையில் 4 டிஎம்சி தண்ணீர் தேக்கிவைக்க முடியும். மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் மழைக்காலங்களில் உற்பத்தியாகும் சின்னாறு, பாம்பாறு, தேனாறு, ஓடைகளில் ஏற்படுகின்ற தண்ணீர் அமராவதி அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரானது குதிரையாறு, நங்காஞ்சியாறு, பாலாறு, புறந்தலாறு, நல்லதங்காள் ஓடை போன்ற துணை நதிகளுடன் இணைந்து சுமார் 220 கிலோமீட்டர் தூரம் சென்று கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் காவிரியுடன் கலக்கிறது. இந்த நெடுந்தூர பயணத்தில் ஏராளமான உயிரினங்கள், நூற்றுக்கணக்கான கிராமங்களின் குடிநீர் தேவையையும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் பாசன தேவையையும் பூர்த்தி செய்கிறது.
விவசாயிகள் கோரிக்கை
ஆனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்குடன் கலந்து வரும் சிறுபாறைகள், மணல், மரக்கட்டைகள் போன்றவை அணையை ஆக்கிரமித்து வருவதால் நீர்தேக்க பரப்பளவை படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் அமராவதிஅணைக்கு மேல் அமைக்கப்படவிருந்த அப்பர் அமராவதி திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அத்துடன் அமராவதி ஆற்றின் குறுக்காக தடுப்பணைகள் கட்டுதல், அணை தூர்வாருதல் போன்ற விவசாயிகளின் நீண்ட கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. 
இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்து உபரிநீராக வீணாக அமராவதி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் வெள்ள அபாயமும், கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் பாசனத்துக்கும் குடிநீருக்கும் போதுமான தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்களும் விவசாயிகளும் தவிக்கும் நிலை உள்ளது.
தடுப்பணைகள்
பொதுமக்கள், விவசாயிகளின் தேவைகளை அறிந்து திட்டங்களை அதிகாரிகள் வகுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். அரசும், நிர்வாகமும் திறம்பட செயல்படுவதற்கும் மாநிலம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்கும் அதிகாரிகளின் பங்கு முக்கியமானதாகும். எனவே மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை சேமித்து நிலத்தடி நீர் இருப்பை உயர்த்துவதற்காக அமராவதி ஆற்றின் குறுக்காக தடுப்பணைகள் கட்டுவதற்கும், அப்பர் அமராவதி திட்டத்தை செயல்படுத்துவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Next Story