திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. வயல்களில் இருந்து தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
திருவாரூர்:-
திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. வயல்களில் இருந்து தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
சம்பா-தாளடி சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும், 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கர் தாளடி சாகுபடியும் என மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரத்து 160 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் 60 சதவீதம் நேரடி விதைப்பு முறையிலும், 40 சதவீதம் நடவு முறையிலும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி முதல் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக திருவாரூர் மாவட்ட பகுதிகளில் இடைவிடாமல் பெய்து வரும் கன மழையால் குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.
தண்ணீர் வடிவதில் சிரமம்
அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதாலும் வயல்களில் இருந்து தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் அருகே கூத்தங்குடியில் சம்பா, தாளடி நேரடி விதைப்பு மற்றும் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட 300 ஏக்கர் பயிர்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இந்த பகுதிக்கு பாண்டவையாறு பாசன ஆறாகவும், காட்டாறு வடிகாலாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் காட்டாற்றில் தண்ணீர் கரையை தொட்டு செல்வதால் வயல்களில் இருந்து தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.
நிவாரணம் வழங்க வேண்டும்
இதனையடுத்து வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா மழை நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு, பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில், ‘மழை காலம் என்றாலே கூத்தங்குடி பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் பெய்த மழையினால் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டது.
தொடர் கன மழையினால் சம்பா, தாளடி பயிர்களும் நீரில் மூழ்கி கிடக்கிறது. எங்கள் பகுதிக்கு வடிகாலான காட்டாற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் வயல்களில் தேங்கிய நீரை வடிய வைக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.
மன்னார்குடி
மன்னார்குடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வயல் வெளிகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆறு குளங்கள் நிரம்பி வருகிறது. மன்னார்குடி அண்ணாமலைநாதர் சன்னதி தெருவை சேர்ந்தவர் கமலா (வயது56) என்பவர் கணவர் இறந்து விட்டநிலையில் மகனுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் பின்புறம் உள்ள குளக்கரையில் இருந்த பனை மரம் ஒன்று நேற்றுமுன்தினம் மாலை திடீரென கூரை வீட்டின் மீது சாய்ந்தது.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் யாரும் பாதிக்கப்படவில்லை. பனை மரம் விழுந்ததில் வீட்டின் கூரை மற்றும் சுவர் விழுந்து முற்றிலும் சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த மின் விசிறி, பீரோ, அடுப்பு மற்றும் பாத்திரங்களும் சேதம் அடைந்தன. பனைமரம் விழுந்ததில் அருகில் சென்ற மின் கம்பி அறுந்து விழுந்து மின் இணைப்பும் அந்த பகுதியில் துண்டிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் அப்பகுதி மக்கள் வீட்டின் மீது விழுந்த பனை மரத்தை அப்புறப்படுத்தினர். நேற்று காலை மின் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை சரி செய்தனர்.
Related Tags :
Next Story