செம்பட்டி அருகே சோகம் வேன் மீது லாரி நேருக்கு நேர் மோதல் பெண் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலி


செம்பட்டி அருகே சோகம்  வேன் மீது லாரி நேருக்கு நேர் மோதல்  பெண் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 27 Nov 2021 9:18 PM IST (Updated: 27 Nov 2021 9:18 PM IST)
t-max-icont-min-icon

செம்பட்டி அருகே வேன் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

செம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி மனைவி செல்லாயி (வயது 45). இவர், திருப்பூரில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.
 இதையடுத்து அவர் வீட்டை காலி செய்து விட்டு மகள் பிரியா (21), அண்ணன் பெரியபாண்டி (48) ஆகியோருடன் ஒரு வேனில் புறப்பட்டார். வேனை, தேனி மாவட்டம்  வருசநாட்டை சேர்ந்த கோட்டைச்சாமி (31) ஓட்டினார். செல்லாயி வேனின் முன்புறம் அமர்ந்திருந்தார். செம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில், வீரசிக்கம்பட்டி அருகே நேற்று அதிகாலை வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது கேரளாவில் இருந்து அரியலூர் சிமெண்டு ஆலைக்கு சென்ற லாரி, வேன் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. 
2 பேர் சாவு
இந்த விபத்தில் செல்லாயி, டிரைவர் கோட்டைச்சாமி ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பிரியா மற்றும் பெரியபாண்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுபற்றி தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் இறந்தவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாமக்கல்லை சேர்ந்த லாரி டிரைவர் ரவிச்சந்திரன் (53) என்பவரை தேடி வருகின்றனர். சாலை விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story